ரி20 தொடரில் ஆப்கானுக்கு வெள்ளையடித்த வங்கதேசம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ரி20 போட்டியில் 6 விக்கெட்டுக்களால் மிக இலகு வெற்றியினைப் பெற்ற பங்களாதேஷ் அணி 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 3:0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பலப்பரீட்சை நடாத்தின. இதில் முதல் இரு ரி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க தொடரை 2:0 என வெற்றி கொண்டிருந்தது.
இந்நிலையில் 3ஆவதும் இறுதியுமான ரி20 போட்டி நேற்று (5) இடம்பெற்றது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் ஆப்கானிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கமைய முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஸூலி 32 ஓட்டங்களையும், ஸித்தீக் 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் சய்புடீன் 3 விளையாட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் எட்டக்கூடிய 144 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு ஸைப் ஆட்டமிழக்காமல் அரைச் சதம் கடந்து 64 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் மிக இலகு வெற்றியைப் பதிவு செய்ததுடன் 3:0 என தொடரை வெள்ளையடித்துக் கைப்பற்றியது.
(அரபாத் பஹர்தீன்)