டார்ஜிலிங்கில் ஏற்பட்ட தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு
டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டவை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிக்கைகளில், சர்சாலி, ஜஸ்பிர்கான், மிரிக் பஸ்தி, தார் காவ்ன் (மெச்சி), மிரிக் ஏரிப் பகுதி மற்றும் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள நக்ரகாட்டா பகுதி ஆகிய பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன.
நிலைமை மோசமடைந்ததால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநில தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, 24×7 கட்டுப்பாட்டு அறையைத் திறந்துவைத்தார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மம்தா பானர்ஜி திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார்.
2015 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவு இது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாக உறுப்பினர் அருண் சிக்சி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில், டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை
இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கனமழை மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து டார்ஜிலிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.



(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)