அல் மர்க்கஸுல் இஸ்லாமியின் 40ஆவது வருட இல்ல விளையாட்டுப்போட்டி
நீர்கொழும்பு போருதொட்ட அல்மர்க்கஸுல் இஸ்லாமி – இஸ்லாமி நிலையத்தின் 40 ஆவது வருட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை போருதொட்ட அல்பலாஹ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மர்க்கஸுல் இஸ்லாமி – இஸ்லாமிய நிலையம் நடாத்தி வருகின்ற ‘முனவ்வரா பாலர் பாடசாலை’ மற்றும் ‘சுலைமானியா பாலர் பாடசாலை’ மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அஷ்ஷேஹ் கலாநிதி அப்துஸ் ஸத்தார் ( மதனி ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு போருதொட்ட அல்பலாஹ் கல்லூரியின் அதிபர் எம்.யூ.பாயிஸ் ( நளீமி ) பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நீர்கொழும்பு வலயத்தில் கடமை புரிகின்ற, மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்கள்,ஆசான்கள்,நிலையத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்ற தனவந்தர்கள், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள்,ஊர்நலன்விரும்பிகள் என பல்வேறுபட்ட தரப்பினர்கள் இவ்விளையாட்டு நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
அல் மர்க்கஸுல் இஸ்லாமி – இஸ்லாமி நிலையமானது 1985 ஆம் ஆண்டு இலவச குர்ஆன் மத்ரஸாவாக ஆரம்பிக்கப்பட்டு பாலர் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்கள் என பல்துறைகளிலும் வியாபித்து இவ்வருடம் 40 ஆவது அகவையில் கால்பதிக்கிறது.
மர்ஹூம் எம்.எஸ்.எம்.நிசாப்தீன் இந்த அல்- மர்கஸுல் இஸ்லாம் கல்வி நிலையத்தின் ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது.





-எம். ஜே. எம். தாஜுதீன்