“ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2025” இன்று ஆரம்பம்
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், “ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2025” நேற்று (02-10-2025) ஆரம்பமாகியது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, அரபு உலகின் மிகப் பெரிய பண்பாட்டு மேடைகளில் ஒன்றாக திகழ்கிறது.
இந்நிகழ்வை இலக்கியம், பதிப்பகம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் (Literature, Publishing and Translation Commission) ஏற்பாடு செய்துள்ளதுடன், இக் கண்காட்சி எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி வரை பிரின்சஸ் நூரா பின்த் அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டிற்கான விருந்தினர் நாடு “உஸ்பெகிஸ்தான்” ஆகும். இது, சவுதி அரேபியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான பண்பாட்டு மற்றும் வரலாற்றுத் தொடர்புகளை பிரதிபலிக்கிறது.
புத்தகக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. சிறுவர்களுக்காக தனித்துவமான சிறுவர் பிரிவு அமைக்கப்பட்டு, குழந்தைகளின் வயதினை கருத்தில் கொண்டு பல்வேறு கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், வணிக மண்டபம் (Business Zone) மீண்டும் தொடங்கப்படுகின்றது. இது பதிப்பகத் துறையில் சர்வதேச கூட்டுறவுகளை வலுப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இம்மண்டபத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் சர்வதேச இலக்கிய முகவர்கள் பங்கேற்கின்றனர்.
அத்துடன், தொழில்முனைவு, பதிப்புரிமை, உரிமம், புத்தக வெளியீடு போன்ற தலைப்புகளில் உரையாடல் அமர்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறவுள்ளன.
இதனுடன், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்பதால், இக்கண்காட்சி சவுதி அரேபியாவை உலக இலக்கியத்திற்கும் அறிவுத்துறைக்கும் முக்கிய சந்திப்பிடமாக மாற்றுகிறது.
இந்நிகழ்வுகள் அனைத்தும் சவுதி அரேபியாவை உலக பண்பாட்டு மற்றும் அறிவுத்துறையின் தலைசிறந்த மையமாக மாற்றும் தலைவர்களின் பார்வையும் வழிகாட்டுதலின் விளைவாக அமைகின்றன. இராச்சியத்தின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல்சௌத் அவர்களின் தொலைநோக்கு பார்வையும், பிரதமர் முகம்மது பின் சல்மான் அவர்களின் “விஷன் 2030” நோக்கும், சவுதி அரேபியாவின் பண்பாட்டு முன்னேற்றத்தையும் உலகளாவிய இடத்தையும் வலுப்படுத்துகின்றன.





(எஸ். சினீஸ் கான்)