உலகம்

“கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை மத்திய பாஜக அரசு இலங்கையிடம் முன்வைத்திருக்க வேண்டும் இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை..!” -தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு

கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். எனவே கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை மத்திய பாஜக அரசு இலங்கையிடம் முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது; “பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமானது ராமநாதபுரம் மண். மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் மண் ராமநாதபுரம். ராமநாதபுரத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட விரிவாக்கம் டிசம்பர் மாதம் தொடங்கி வைக்கப்படும். விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறப்போகின்றனர். இனிமேல் ராமநாதபுரம் மாவட்டத்தை தண்ணியில்லா காடு என்று சொல்ல முடியாது. ராமநாதபுரத்தில் 2.36 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர்.

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ரூ.30 கோடி செலவில் 4 வழி சாலையில் இருந்து 6 வழிசாலையாக மாற்றப்படும். திருவாடனை, ஆஸ்.எஸ்.மங்கலம் வட்டங்களில் 16 கண்மாய்கள் ரூ.18 கோடியில் மேம்படுத்தப்படும். ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும். பரமக்குடி நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்படும். சொன்னதை செய்வது மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்யும் அரசு நமது திராவிட மாடல் அரசு.

“மீனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை இலங்கை கடற்படையின் தாக்குதல்தான். இதனை நாம் தொடர்ந்து கண்டிக்கிறோம், போராட்டம் நடத்துகிறோம். ஆனால், ஒன்றியத்தை ஆளும் பாஜக மீனவவர்களை காக்க எதுவும் செய்யவில்லை.

கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். எனவே கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை மத்திய பாஜக அரசு இலங்கையிடம் முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு மீது மத்திய அரசுக்கு ஏன் வன்மம்? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா?இலங்கை சென்ற இந்திய பிரதமரும் இதனை வலியுறுத்த மறுக்கிறார்.

கச்சத்தீவை தரமாட்டோம் என இலங்கை அமைச்சர் கூறுகிறார். இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா? தமிழ்நாடு மீனவர்கள் என்றாலே பாஜக அரசுக்கு இளக்காரமாக போய்விட்டது. நமது மீனவர்களை காக்க மத்திய அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை.

தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை. ஜிஎஸ்டி, நிதிபகிர்வு உள்ளிட்டவற்றில் மத்திய அரசு, தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது. மாநில நலன்களை புறக்கணித்து மாநில உரிமைகளை பறிக்கிறது.

மணிப்பூருக்கு குழு அனுப்பாத பாஜக அரசு, கரூருக்கு குழூ அனுப்புவது ஏன்? தமிழகத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் மத்திய அரசு குழு அனுப்புகிறது. தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யாரும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக வளர்த்தெடுக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன் இவ்வாறு அவர் பேசினார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *