உள்நாடு

எல்லாவற்றையும் இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றும் அரசு..! – சஜித் பிரேமதாச கண்டனம்

கல்வித்துறையில் தற்போது கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளன. பாடசாலை வசதிகள் பற்றாக்குறையும், ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவும் நேரத்தில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,200 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கைவிடப்பட்டுள்ளனர். மனித வளம் மற்றும் பௌதீக வளங்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகின்றன. பாடசாலைகளுக்கு கணினி வசதி கொண்ட ஸ்மார்ட் திறை வழங்கியபோது என்னை விமர்சித்து, கேலி செய்த தற்போதைய ஆளும் தரப்பினரால் இன்று அதிகாரத்தை வைத்துக் கொண்டும் அதைப் போல ஒரு செயல்திட்டத்தை முன்னெடுக்க முடியாதவர்களாக காணப்படுகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மனநிலை குழம்பிப்போனவர்களே இந்த ஆளும் தரப்பில் பதவிகளில் இருந்து வருகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மானசீக ரீதியிலான தண்டனைகள் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச் செயல்களாக இருந்தாலும், சமூகத்திற்கும் சிறார்களுக்கும் பொருத்தமற்ற கொள்கைகளை காட்டுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கிராமத்துக்கு கிராமம் வீட்டுக்கு வீடாக எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் இன்று (03) அநுராதபுரம் மாவட்டம், கலாவெவ தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ராஜாங்கன யாய 16-17 பிரதேசத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது, ​​நாட்டு மக்கள் மிகவும் உதவியற்ற நிலையில் காணப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் வலி, விரக்தி, துன்பம் மற்றும் பிரச்சினைகள் நிறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை. விவசாயிகள் முறையான உர மானியங்களைக் கூடப் பெற்றபாடில்லை. அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்தால், தரமான விதைகள், சரியான நேரத்தில் உரம், யூரியா போன்றவற்றின் பற்றாக்குறையையும் விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். விவசாய உபகரணங்கள் மற்றும் உரங்களின் விலைகள் கூட அதிகரித்துள்ளன. யானை-மனித மோதலால் பயிர் சேதம், உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்படுவது போலவே காட்டு யானை வளங்களின் அழிவும் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில், அறுவடைக்கு உத்தரவாத விலை கூட கிடைக்கும்பாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு கழிப்பறை தொகுதி நிர்மானிப்பது தொடர்பில் பேசும் அரசாங்கத்தால், தற்போது இலவசமாக செய்ய முடியுமான யானை வேலிகளைக் கூட போட்டுக் கொள்ள முடியாது போயுள்ளன. எனவே, இந்தத் வெற்று கோஷங்களை ஒதுக்கி வைத்து விட்டு, விவசாயியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். இந்த அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது வெளிநாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று சொன்னார்கள். இப்போது எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கம் இப்போது பொருளாதார மத்திய நிலையங்களைக் கூட விற்கத் திட்டமிட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *