உள்நாடு

பொன்னன்வெளிக் கண்ட காணி உரிமையாளர்களுக்கு பதில் காணி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..! -மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோரிக்கை பா. உ. உதுமாலெப்பை

பொன்னன்வெளிக் கண்ட காணிகள் ஒலுவில் பிரதேச மக்களுக்குரிய காணியாகும். இக்காணிகளில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையும் பொன்னன்வெளிக் கண்டத்தில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணி எதுவும் வழங்கப்படாத நிலையில் காணிகளை இழந்த விவசாயிகள் தங்கள் காணிகளுக்கான பதில் காணிகளையாவது வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பொன்னன்வெளிக் கண்டத்தில் காணியை இழந்த 150 பேருக்கு 3 ஏக்கர் வீதம், 2 ஏக்கர் வீதம் என்ற அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அரசகாணியில் 378 ஏக்கர் காணிகளுக்கான பதில் காணிகளை வழங்குவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உத்தரவுப்பத்திரங்கள் எழுதப்பட்டு பொன்னென்வெளிக் கண்டத்தில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணி வழங்குவதற்கு (1996ம் ஆண்டு) இருந்த வேளையில் இனவாதக்குழுக்களின் செயற்பாட்டினால் இப்பதில் காணி வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. எனவே, அட்டாளைச்சேனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பொன்னன்வெளி கண்டத்தில் காணிகளை இழந்த விவசாயிகளுக்கு பதில் காணி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்வுக்காக சமர்ப்பிப்பதாக அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் விளக்கம் தருமாறு கேட்டுக் கொண்டார் இது தொடர்பாக விளக்கமாளித்த அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொன்னன்வெளிக் கண்டத்தில் காணிகளை இழந்த விவசாயிகளுக்கு பதில் காணி வழங்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது எனவே பொன்னன்வெளிக் கண்டத்தில் காணிகளை இழந்த விவசாயிகள் தங்களுக்கு பதில் காணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பொன்னன்வெளிக் கண்டத்தில் காணிகளை இழந்த விவசாயிகள் தொடர்பாக விசேட கூட்டத்தினை ஏற்பாடு செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து ஒரு அறிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு கையளிப்பதாக நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்த பிரதி அமைச்சர் திரு. வசந்த பியதிஸ்ஸ நீண்ட காலமாக மக்களுக்கு கையளிக்க முடியாத நிலையில் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் காடு பிடித்துள்ளது. வீட்டுத்திட்டத்தை திருத்துவதற்கு சவுதித் தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் நமது நாட்டில் வாழும் இன விகிதாசார அடிப்படையில் வீடுகளை வழங்க வேண்டுமென தீர்வு வழங்கி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விபரங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக விளக்கம் அளித்த அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. சிந்தக்க அபே விக்ரம நீதிமன்ற தீர்ப்பை நான் மீற முடியாத நிலை உள்ளது. எனவே, அம்பாறை மாவட்டத்தில் வாழும் இன விகிதாசார ரீதியில் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கமளித்த அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அன்சார் அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு அம்பாறை கச்சேரியில் நேர்முக பரீட்சை நடாத்தப்பட்ட 335 பேர் உள்ளதாகவும் இவர்களுக்கு வீடுகளை வழங்கி மிகுதியான வீடுகளை மாவட்ட இன ரீதியில் வழங்கப்பட்டால் பிரச்சினை இல்லை என தெரிவித்தார்.

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை…

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கிய சவுதி அரேபியா வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நீதி அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக செயல்பாடுகளை முன்னெடுக்கலாம் என தெரிவித்தார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினராகிய எனக்கு இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டிய உரிமை உள்ளது என தெரிவித்தார்

இதனையடுத்து கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயர் யு.எல். உவைஸ் அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டன. இன விகிதாசார ரீதியில் வீடுகள் வழங்கப்பட எடுக்கும் தீர்மானங்கள் தவறானது என தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.மாஹிர் அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்ட சகல இனங்களுக்காகவும் நிர்மானிக்கப்பட்டது என தெரிவித்தார். அதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ வீடுகளை மக்களுக்கு கையளிப்பதற்கான ஏற்பாடுகளை தான் மேற்கொள்வதாகவும் அம்பாறை மாவட்டத்தில் வாழும் சகல இனங்களின் விகிதாசார முறைப்படி இவ்வீடுகளை பங்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மத்திய முகாம் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானத்திற்கான காணியினை வழங்குதல், இறக்காமப் பிரதேசத்தின் பொது தேவைகளுக்காகவும், பொது விளையாட்டு மைதானத்திற்காகவும் கரும்புக் காணி உரிமையாளர்கள் இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள தங்களின் கரும்புக் காணியினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் அவர்களுக்கான பதில் காணியினை வழங்குவதற்கான அனுமதியினை வழங்க வேண்டும். அட்டாளைச்சேனை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கும், நிந்தவூர் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையத்தில் டீசல் மாத்திரம் விநியோகிக்கப்படுவதால் நிந்தவூர் கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் வழங்குவதற்கான அனுமதியினை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். மத்தியமுகாம் பிரதேசத்துக்கான பொது விளையாட்டு மைதானத்திற்கான அரச காணி ஒன்றினை அடையாளப்படுத்துமாறு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இறக்காம பிரதேச பொதுத் தேவைக்கான காணியும், பொது விளையாட்டு மைதானத்திற்கான காணியும் கரும்புக் காணி உரிமையாளர்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதால் இறக்காம பிரதேச செயலாளர் இறக்காமப் பிரதேச செயலாளர் பிரிவில் அரச காணியினை அடையாளப்படுத்தி பதில் காணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *