உள்நாடு

“சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” செயலமர்வு

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவையினால் “சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் இடம்பெறும் அரச நிகழ்வுகளை அறிக்கையிடும் உத்தியோகத்தர்களுக்குமாக செயலமர்வொன்று நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு, பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செயலமர்வில் மாவட்டத்தில் அரச ஊடகங்கள், தனியார்துறை ஊடகங்கள், சமூக ஊடக வலையமைப்புக்கள் போன்றவற்றின் ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள், மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் இடம்பெறும் அரச நிகழ்வுகளை அறிக்கையிடும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுமார் 70 இற்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி சிறீகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் இலங்கை பத்திரிகைப் பேரவையின் தலைவர் பீ.ஆர். விஜயபண்டார தினகரன், வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான தேவதாசன் செந்தில்வேலவர், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாக தொடர்பாடல் வணிக ஆய்வு பீடத்தின் விரிவுரையாளர் ஜோயல் ஜெய்ருஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடக நெறிமுறை, செய்தி வடிவமைப்பு, பிழையான செய்தியறிக்கையின் ஊடாக ஏற்படும் விளைவுகள், சமூகப் பொறுப்புடன் செய்தியறிக்கையிடல், சமூக ஊடக பாவனை போன்ற மேலும் பல வியைங்கள் இதன்போது வளவாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டன.

செயலமர்வில் பங்குபற்யிருந்த அறிக்கையிடலாளர்களுக்கு செயலமர்வில் பங்குபற்றியதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும், இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் உதவி ஆணையாளர் சுரேசன்ன இரங்க, மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் உட்பட மட்டக்களப்பு மாவட்டச் செயலக தகவல் ஊடகப் பிரிவு அலுவலர் குழாம் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களான யூ. உதயகாந்த், இப்றாஹிம் கமால்தீன், விநோதினி சுரேஷ்குமார், வெப் ரைற்றர் எம்.எம். பாத்திமா நஸ்ரியா, ஒளிப்படப் பிடிப்பாளர் ஜி. மயூரன் ஆகிய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *