13ஆவது மகளிர் உலகக்கிண்ணம் இன்று ஆரம்பம்; முதல் போட்டியில் இலங்கை – இந்தியா மோதல்
13 ஆவது மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இந்தியாவின் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் மற்றைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
பின்னர் லீக் சுற்று முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்திய அணியை ஹர்மன்பிரீத் கவுரும் இலங்கை அணியை சமரி அத்தபத்துவும் வழிநடாத்துகின்றனர். இப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கின்றது.