எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்; தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
“எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று காணொளி மூலமாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை மதியம்
வெளியிட்ட காணொலியில் பேசியதாவது , ‘கரூரில் நடந்தது கொடும் துயரம். மருத்துவமனையில் நான் சென்று பார்த்த காட்சிகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. கனத்த மனதோடுதான் இன்னும் இருக்கிறேன். இந்த செய்தி கேட்டவுடன் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னாலும் வீட்டில் என்னால் இருக்க முடியவில்லை. அதனால்தான் உடனே அன்று இரவே கரூர் சென்றேன். குழந்தைகள், பெண்கள் என 41 உறவுகளை நாம் இழந்துள்ளோம். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து வழங்கி வருகிறோம்.
நடந்த சம்பவங்களுக்கான உண்மையான, முழுமையான காரணத்தை ஆராய முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்குமென உறுதியளிக்கிறேன்.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எந்த கட்சியை சார்ந்தோராக இருந்தாலும், என்னை பொறுத்தவரை அவர்கள் நம் தமிழ் உறவுகள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது எத்தகைய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டுமென விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. எனவே, நீதியரசர் ஆணைய அறிக்கை கிடைத்த பின்னர், அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படுமென உறுதியளிக்கிறேன்.
அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். மனித உயிர்களே எல்லாவற்றுக்கும் மேலானது, மானுட பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும். தமிழகம் எப்போதும் எல்லா வகையிலும், நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்ந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுப்பது நம் எல்லோருடைய கடமையாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)