9ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்தை தனதாக்கியது இந்தியா
ஆசியக் கிண்ண ரி20 தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி 9ஆவது முறையாகவும் சம்பியன் மகுடத்தை தனதாக்கியது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி.
17ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வந்தது. இதில் இம்முறை 8 அணிகள் பங்கேற்றிருந்தன. முதல் சுற்றின் முடிவில் குழு நிலையில் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய4 அணிகள் சுப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தன.
பின்னர் இடம்பெற்ற சுப்பர் 4 சுற்றின் லீக் போட்டிகள் முடிவில் எந்தவித தோல்விகளையும் சந்திக்காத இந்திய அணியும், இரு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் பாகிஸ்தான் அணியும் முதல் இரு இடங்களைப் பிடித்து 17ஆவது ஆசியக் கிண்ண ரி20 தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
இத் தீர்மானிக்க போட்டி நேற்று (28) இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பித்திருந்தது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப விக்கெட் ஜோடியான பக்கர் சமான் மற்றும் பர்ஹான் ஆகியோர் தமக்கிடையில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் பர்ஹான் அரைச் சதம் கடந்து 57 ஓட்ங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். பின்னர் பக்கர் சமான் 47 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
பின்னர் வந்த எந்த ஒரு துடுப்பாட வீரர்களும் பொறுப்புணர்ந்து துடுப்பாடத் தவறி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப இறுதியில், பாகிஸ்தான் அணியால் 19.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற முடிந்தது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 147 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய முதல் 3 விக்கெட்டுக்களையும் 22 ஓட்டங்களுக்கு இழந்த போதிலும் இளம் வீரரான திலக் வர்மாவின் அதிரடி அரைச் சதம் (69) கடந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் 9 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை தனதாக்கி அசத்தியது. இறுதிப் போட்டியில் நாயகனாக திலக் வர்மாவும், தொடரின் நாயகனாக அபிஷேக் சர்மாவும் தெரிவாகினர்.
(அரபாத் பஹர்தீன்)