ஹொரவப்பொத்தானை அஹமட் இம்தியாஸின் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு
அநுராதபுரம், ஹொரவப்பொத்தானை அஹமட் இம்தியாஸின் தீயினுள் நீர்த்துளி (சிறுகதைத் தொகுப்பு), சாம்பலிலும் பன்னீர்ப்பூ (கவிதைத் தொகுப்பு) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு கடந்த சனிக்கிழமை (20/09/2025 ) அன்று ஹொரவப்பொத்தானை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் ஓய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் ஷியாம் ஹாஜியார் பெற்றுக் கொண்டார். நூலின் கௌரவப் பிரதியை ஹிமா பார்ம் உரிமையாளர் தொழிலதிபர் ஷியாத் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் வரவேற்புரையை கவிஞர் இம்தியாஸின் சகோதரர் அதிபர் ஷிபா தாஹா நிகழ்த்தினார், தலைமை உரையை ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் அப்துல்லாஹ் நிகழ்த்த நூல் பற்றிய உரையை கவிஞர் எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீன், கெகிறாவ சுலைஹா ஆகியோர் நிகழ்த்தினர்.
தனது தந்தை பற்றிய கவிதை ஒன்றை கவிஞரின் சிறிய மகள் மேடையிலே பாடி அசத்தினார். நிகழ்வின் இடையிலே கலாநிதி எம்.சி. ரஸ்மின் அவர்களின் இம்தியாஸ் தொடர்பிலான காணொளி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. ஒலி ஒளிபரப்பாளர்களான ஜுனைத் எம். ஹாரிஸ், ஜெஸ்மின், படிகள் ஆசிரியர் எல்.வஸீம் அக்ரம் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மிகவும் உருக்கமாக ஏற்புரையை நூலாசிரியர் இம்தியாஸ் நிகழ்த்தினார். நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் தமது வாழ்த்துரைகளை விடிவெள்ளி ஆசிரியர் பைரூஸ், பாரம்பரியம் புகழ் எம்.எஸ்.எம் ஜின்னாஹ் ஆகியோர் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் மூலம் அனுப்பி வைத்திருந்தனர்.
நிழ்வில் இறுதியாக நன்றியுரையை ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் ரமீஸ் ஆசிரியர் நிகழ்த்தினார். அல்-ஹிஜ்ரா விளையாட்டு கழகம் மற்றும் ஹொரவப்பொத்தானை கலை இலக்கிய வட்டம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. சிரேஷ்ட ஒலி ஒளிபரப்பாளர் அஹமட். எம். நசீர் நிகழ்வுகளை கவித்துவமாக தொகுத்து வழங்கினார்.







