தேசிய ஒற்றுமையை காப்பதே ஊடகவியலாளர்களின் முதன்மைக் கடமை..! -சுகாதார ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தேசிய ஒற்றுமைக்காக அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும், தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதே ஊடகவியலாளர்களின் முதன்மைக் கடமை எனவும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் அதன் 30 வருட நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (27) இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னால் அமைச்சர்கள், தூதுவர்கள், அரச அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து தமதுரையில்,
நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் பொதுமக்களின் வாழ்வை பெரிதும் பாதித்துள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஊடகவியலாளர்கள் தங்கள் பொறுப்பை மேலும் உணர்ந்து செயல்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.
வெறும் தகவல் வெளியிடுவது மட்டுமல்ல ஊடகவியலாளர்களின் முதன்மைக் கடமை தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதேயாகும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பல தசாப்தங்களாக உள்நாட்டு மோதல்களாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மனங்களில் இன்னும் அந்தக் காயங்கள் ஆறாமல் இருக்கின்றன. இத்தகைய சூழலில் சிறிய சம்பவங்களுக்குக் கூட பெரிய பிம்பம் அளித்து வெளிப்படுத்தினால் சமூகத்தில் பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சில அரசியல் கட்சிகள் தமது அரசியல் இலாபத்திற்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயல்படுகின்றன. ஆனால் ஊடகங்கள் அந்த அரசியல் வலைவீச்சுகளில் சிக்காமல், நாட்டின் நிலைத்தன்மை மற்றும் மக்கள் நலனுக்காக உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் செய்திகளை வெளிப்படுத்துவதே ஊடகத்துறையின் உண்மையான பணி ஆகும்.
சமூகத்தில் நிகழும் சிறிய சம்பவங்கள் கூட ஊடகத்தின் மூலம் மிகப்பெரிய செய்தியாக மாறுகின்றன. இத்தகைய செய்தி வெளிப்பாடுகள் இன, மத, கலாச்சார அடிப்படையில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. அதேவேளை அரசு செய்யும் தவறுகள் மறைக்கப்படாமல், உண்மைகள் சரியான முறையில் வெளிப்பட வேண்டும் என்பதும் ஊடகங்களின் கடமையாகும் .
இந்த நாட்டில் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என பல இன, மத, கலாச்சாரக் குழுக்கள் இணைந்து வாழ்கின்றனர். இந்த வேறுபாடுகள் காரணமாக பிரிவினை தோன்றாமல், அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தில் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.
பொருளாதார முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் தேசிய ஒற்றுமை அத்தியாவசியம் .
பொதுமக்களின் குரலை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஊடகத்துறை, சமூக அமைதியையும் ஒற்றுமையையும் காக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தேசிய ஒற்றுமைக்காக கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியம்.
மேலும் ஒற்றுமை வார்த்தைகளில் மட்டும் அல்ல, செயலிலும் தேவை நாம் ஒவ்வொருவரும் வேறு மதம், இன, கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்தாலும், வெறும் வார்த்தைகளில் ஒற்றுமை எனச் சொல்லிக் கொண்டிருக்காமல், நாட்டின் அபிவிருத்திக்காக நமது திறமைகளையும் பங்களிப்புகளையும் வழங்க வேண்டும். ஊடகவியலாளர்கள் ஒரு தொழில் முனைவோர் அல்ல; அவர்கள் தேசிய முன்னேற்றத்திற்கு பொறுப்பேற்கும் முக்கிய சக்தி.
ஒரு அரசாங்கம் தவறுகள் செய்தால் அது தொடர்பான உண்மையான தகவல்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதே சமயம், தேவையற்ற பிளவுகள் ஏற்படாதபடி ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மிக முக்கியம். இவ்வாறு செயல்பட்டால்தான் நாம் அனைவரும் இன, மத வேறுபாடுகளை மறந்து, ஒரே இலங்கையர்கள் என முன்னேற முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
(நன்றி: சிடிசன் ஊடக வலையமைப்பு)