உள்நாடு

நாட்டுக்கும், மக்களுக்கும், தொழில் முயற்சியாளர்களுக்கும் நன்மை பயக்கும் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இப்போதாவது இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கம் நுண் பொருளாதாரம், பேரண்ட பொருளாதாரம் குறித்து சிந்திப்பது போலவே, தனிநபர்கள், குடும்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் வியாபாரிகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். இன்றும் கூட, நுண் பொருளாதாரத்தில் தனிநபர், சமூகம் மற்றும் குடும்ப அலகுகள் அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றன. அரசாங்கம் ஏற்றுமதிக்கு உகந்த கொள்கையைப் பின்பற்றினால், சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடி ஒக்டோபர் 1 முதல் இலகுபடுத்த ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT) ஐ நீக்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தேர்தலின் போது வாக்குறுதியளித்த பிரகாரம், புதிய IMF இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தால் ஏற்றுமதிக்கு உகந்த SVAT தக்கவைக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அது இன்று நீக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. விநியோகஸ்தர்களிடமிருந்து VAT அறவிடுவதற்குப் பதிலாக, SVAT இன்வாய்ஸ் வழங்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் குறித்து கவலை இருந்தால், IMF விதிமுறைகளின் பேரில் இவை ஏன் நீக்கப்படுகின்றன என்பதில் பிரச்சினை காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஏற்றுமதித் துறை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று (25) நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது ஏற்றுமதியாளர்களுக்கு பணப்புழக்க சிக்கலை உருவாக்குகின்றமை இதன் பாதக அம்சமாக காணப்படுகின்றன. தாமதங்கள் நேரத்தை வீணடிக்கும், செயல்திறனைக் குறைக்கும், நிர்வாகச் செலவுகளை அதிகரிக்கும், ஏற்றுமதித் துறையில் போட்டியிட வாய்ப்புள்ள பிற நாடுகள் இந்தப் பிரச்சினையில் விரைந்து செயல்படும் நிலை எமக்கு பாதகமாக அமையும். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்குக் கூட மூலதனப் பிரச்சினைகளை இது உருவாக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

VAT இணக்கத்தையும் வரி அறவீட்டையும் அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிபந்தனையை IMF 2024 ஜூன் விதித்துள்ளது. காலாண்டுக்கு ஒருமுறை பெற்றுத் தரும 2.9 பில்லியனுக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நமது நாட்டில் ஏற்றுமதியாளர்கள் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இறுதி நேரத்திலேனும் IMF உடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும், டிஜிட்டல் மயமாக்கல் நிறைவுறும் வரையும் இதை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் நாட்டின் வங்குரோத்து நிலை காரணமாக 260,000 தொழில்முனைவோர் சிரமத்திற்கு ஆளானார்கள். இப்போதாவது சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடாமல் செயல்படுமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். அமைச்சரால் முன்வைக்கப்படும் நம்பிக்கையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் கபட அரசியலில் ஈடுபட மாட்டோம். இரண்டு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இலக்குகளை தாண்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. 2028 முதல் ஆண்டுதோறும் 5.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த அரசாங்கம் தயார் நிலையிலா இருக்கிறது என நாம் கேள்வி எழுப்புகிறோம். முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட IMF ஒப்பந்தத்தைப் அவ்வாறே பின்பற்றாமல் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தால், 2033 ஆம் ஆண்டிலிருந்தே கடனை திருப்பிச் செலுத்தும் நிலைக்கு வந்திருக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் சுமார் 50 சதவீதம் ஆனோர் பல்வேறு வகையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நுகர்வு, வருமானம், உற்பத்தி மற்றும் முதலீடு ஆகிய வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் வறுமை தொடர்பில் ஜனாதிபதி பேசியது நல்ல வியமாகும். என்றாலும், அஸ்வெசும மூலம் வறுமை ஒழிக்கப்படாது. அஸ்வெசும நுகர்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகும். ஏற்றுமதி, உற்பத்தி அல்லது சேமிப்பு எதுவும் இதில் அடங்கியில்லை. இது சிரமங்களை அனுபவிக்கும் மக்களுக்கு நுகர்வுக்கான நிதிசார் வசதியை பெற்றுக் கொடுப்பதற்காக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. எனவே வறுமையை ஒழிப்பதற்கு நாட்டிற்கு ஒரு தெளிவான பயனுள்ள திட்டமொன்று அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *