உள்நாடு

ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதி அனுர சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (25) இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தை சென்றடைந்த ஜனாதிபதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மரியாதையுடன் வரவேற்றதுடன், பின்னர் அவர்கள் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.

இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம், இலங்கையை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதிய தளத்திற்கு உயர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வரும் செயற்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ஐ.நா. பொதுச்செயலாளரிடம் விளக்கினார்.

இலங்கை அரசாங்கத்தின் புதிய முற்போக்கான செயற்திட்டத்தைப் பாராட்டிய பொதுச்செயலாளர், அதற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்நிற்பதாகவும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய ஆகியோருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *