உலகில் முன்னணி நாடாக சவுதியை கட்டியெழுப்பியவர் மன்னர் சல்மான்
(இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்று பதினோராவது ஆண்டு நிறைவடைவதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது)

“மன்னர் சல்மான், “மலிகுல் இன்ஸானிய்யா” – “மனிதநேய மன்னர்” மற்றும் “காதிமுல் ஹரமைன் அல் ஷரீபைன்” – “இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர், ஊழியர்” என்ற சிறப்புப் பெயர்கள் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ள மன்னர்.”
உலகின் முஸ்லிம் சமூகத்திற்காகவும் தன் நாட்டுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து அளப்பரிய சேவைகள் செய்துவரும் சிறந்த மனிதரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், கடந்த பத்தாண்டுகளில் சவுதியின் அபிவிருத்திக்கும் உலக முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கும் மாத்திரமல்லாமல் முழு மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஆற்றியுள்ள சேவைகளும் பணிகளும் வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன.
குறிப்பாக சவுதி அரேபியாவின் செழிப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அவர் தன்னாலான அனைத்து பணிகளையும் மேற்கொண்டுள்ளார். அந்த முயற்சிகளில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். அதன் பயனாக சவுதி மக்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் உலக முஸ்லிம்கள் மத்தியிலும் தனியிடம் பிடித்த ஒப்பற்ற தலைவராக விளங்குகிறார் மன்னர் சல்மான்.

இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலராக விளங்கும் இவர், மனிதாபிமானம் நிறைந்த தலைவராகவும், நீதியுள்ள இமாமாகவும் முஸ்லிம்களின் ஆட்சியாளர் எனக் கருதப்படும் அளவுக்கு அவர் சிறந்தவராகக் கருதப்படுகிறார். அவர் மன்னராகப் பதவியேற்று இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைந்து 11வது வருடம் பிறக்கிறது.
இந்தக் காலப்பகுதியில் தன்னுடைய நாட்டு மக்கள் என்றும் வேறு நாட்டுப் பிரஜைகள் என்றும் பிரித்துப்பார்க்காமல் அனைத்து மக்களையும் ஒரே விதமான மனிதாபிமான கண் கொண்டு நோக்குகிறார் அவர். அதற்கேற்பவே அவரது சேவைகள், பணிகள் அமைந்துள்ளன.
மன்னராக சல்மான் பதவியேற்றதும் பட்டத்து இளவரசராக முஹம்மத் பின் சல்மான் நியமனம் பெற்றார். அவர் சவுதியின் துரித முன்னேற்றத்தில் விஷேட கவனம் செலுத்தும் துடிப்பு மிக்க இளம் தலைவராவார். இந்தப் பின்புலத்தில் சவுதியை சகல துறைகளிலும் மன்னர் சல்மானினால் துரிதமாக அபிவிருத்தி செய்ய முடிந்துள்ளது.
இதன் பயனாக சவுதியானது மத்திய கிழக்கின் தலைநகராகவும் உலக சமாதானத்தின் கேந்திர மையமாகவும் மாத்திரமல்லாமல் உலக முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரிய தேசமாகவும் திகழுகிறது. உலகமே சவுதியை வியப்பும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அதன் முன்னேற்றங்கள் அமைந்துள்ளன.

மன்னரதும் இளவரசரதும் கடும் முயற்சிகளின் ஊடாக பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நாடாக விளங்குகிறது சவுதி. தங்கள் நாட்டுப் பிரஜைகள் யாராவது உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி பயங்கரவாதத்திற்குத் துணை புரிந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மிகக் கடும் தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக மரண தண்டனையை வழங்கவும் சவுதி பின்நிற்பதில்லை.
இந்தப் பின்னணியில் மன்னர் சல்மான், இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலைமைத்துவ வழிகாட்டல்களின் கீழ் சவுதியின் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் ஆல் ஷைக்கின் ஏற்பாட்டில் பயங்கரவாத ஒழிப்பு மாநாடுகளும் செயலமர்வுகளும் விழிப்புணர்வு கருத்தரங்குகளும் சவுதியிலும், உலகின் ஏனைய நாடுகளிலும் அடிக்கடி நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் நிமித்தம் வருடாவருடம் கோடிக்கணக்கான ரியால்களை சவுதி செலவிட்டு வருகின்றது. உலகம் அமைதி, சமாதானம் தலைத்தோங்கும் பூமியாகத் திகழ வேண்டும் என்பதே மன்னரினதும் இளவரசரினதும் ஒரே இலக்காகும்.
அதேநேரம் ஊழல் மோசடிகளை ஒழிப்பதிலும் சவுதி விஷேட கவனம் செலுத்தி செயற்படுகிறது. தம்முடைய நாட்டில் ஊழல் மோசடியில் எவர் ஈடுபட்டாலும், குறிப்பாக அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது உயர் பதவிகள் வகிப்பவராக இருந்தாலும் அவர்கள் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவர். அத்தோடு ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் அவரது சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக உயரிய தண்டனைகளும் அத்தகையவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும் போதைப்பொருட்களை முற்றாகத் தடை செய்த நாடு சவுதி. அதற்கென அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அச்சட்டங்களை மீறுவோருக்கு கடும் தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. போதைப்பொருள் எவ்வடிவத்தில் இருந்தாலும் அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றும் நாடாக திகழுகிறது சவுதி. ஏனெனில் போதைப்பொருட்களின் பேழிவில் இருந்து மனித சமூகத்தைப் பாதுகாப்பதே சவுதியின் இலக்காகும்.
அதனால் உலகில் யாராவது தங்கள் நாட்டில் பயங்கரவாதத்தையும் ஊழலையும் போதைப்பொருள் குற்றங்களையும் ஒழித்து நாட்டை முன்னேற்றப் பாதையிலும் பிரஜைகளை நற்பண்புகள் நிறைந்தவர்களாகவும் கட்டியெழுப்ப விரும்புவார் என்றால் அதற்கான சிறந்த முன்மாதிரிகளாக சவுதி மன்னரையும் இளவரசரையும் கொள்ள முடியும்.
பலஸ்தீன மக்கள் முகம் கொடுத்துவரும் துன்ப துயரங்களை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் சவுதி விஷேட கவனம் எடுத்துக் கொண்டுள்ளது. இதன் நிமித்தம் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர முயற்சிகளை கடும் அர்ப்பணிப்புகளுடன் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. பலஸ்தீனை தனி நாடாக அங்கீரிக்க சவுதி அரேபியா அயராது உழைத்து வருகிறது. அதனால் உலக வல்லரசுகள் கூட இவ்விடயத்தில் சவுதி அரேபியாவின் தயவை நாடி நிற்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சவுதியை இவ்வாறான நிலைக்கு கட்டியெப்புவதில் மன்னரதும், இளவரசரதும் வழிகாட்டல்களில் பிராந்திய மட்டத்திலும் உலகளாவிய மட்டத்திலும் வெளிநாட்டமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் ஆல் ஸஊத் முன்னெடுத்துவரும் அளப்பரிய பணிகள் மெச்சிப் பாராட்டத்தக்கவையானகும்.

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளும் சவுதி, பிராந்தியத்திலும் முழு உலகிலும் தவிர்க்க முடியாத தனித்துவம் மிக்க இடத்தைப் பிடித்துள்ளது.
இவை இவ்வாறிருக்க, இன்றைய நவீன உலகுக்கு ஏற்ற வகையில் சவுதியைக் கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்தியுள்ள சவுதியின் விஷன் 2030 என்ற திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இளவரசரின் இந்த தொலைநோக்கு திட்டம், மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸினதும் சவுதி மக்களினதும் முழுமையான ஆதரவுப் பெற்றதாக உள்ளது. சவுதியைக் கட்டியெழுப்பும் நோக்கிலான அனைத்து திட்டங்களும் இந்த தொலைநோக்கு திட்டத்தின்படி முன்னெடுக்கப்படுகின்றன. மன்னரின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டங்களின் ஊடாக சாதனைகள் பலவும் அடையப்பட்டுள்ளன.
குறிப்பாக சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகருக்கு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் 62 வருடங்கள் கவர்னராக பணிபுரிந்துள்ளார். அக்காலப் பகுதியில் ரியாத்தை கட்டியெழுப்பவென அவர் அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதன் ஊடாக ரியாத் பாரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அதன் பயனாக ரியாத் மாநகரம் இன்று உலகிலேயே மிக முன்னேற்றமடைந்த மாநகராக விளங்குகிறது. ரியாத் மாநகரைக் கட்டியெழுப்புவதில் பெற்றுக்கொண்ட பரந்த அனுபவமும் அறிவும் முழு நாட்டையும் துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அவருக்கு பின்புலமாக அமைந்துள்ளது. அதே போல் அவர் இலவரசராக பாதுகாப்பு அமைச்கராக துனைப் பிரதமராக செயல்பட்டு நாட்டுக்குப் பல சேவைகளைச் செய்துள்ளார்.
அவர் பல ஸஊத் மன்னர்களின் நம்பிக்கைக்குரிய செயலாளராகவும், அவர்களது சிறந்த தனிப்பட்ட ஆலோசகராகவும் செயற்பட்டிருக்கிறார். அவர் தனது 10வது சிறு வயதிலேயே முழுக் குர்ஆனையும் மனனம் செய்த ஹாபிழுமாவார்.
மேலும் உலக முஸ்லிம்கள் தங்கள் புனிதக் கடமையான ஹஜ், உம்ரா கிரியைகளை நிறைவேற்றவென சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும். அதுவே இறைவனின் ஏற்பாடாகும். அத்தோடு இஸ்லாமியச் சின்னங்களையும் புராதனச் சின்னங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது சவுதி அரேபியா. அதனால் புனிதக் கடமைகளை நிறைவேற்ற வரும் உலக முஸ்லிம்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சவுதி செய்து கொடுக்கின்றது. குறிப்பாக புனித மக்கா, மதீனா வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கும் மன்னரின் நேரடி கண்காணிப்பிலும் பாரிய நிதி ஒதுக்கீட்டிலும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.
குறிப்பாக இரு ஹரம் ஷரீப்களிலும், விமான நிலையங்களிலும், தரிசிக்கின்ற புனித இடங்களிலும் உள்விவகார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சு, ஹஜ் உம்ரா அமைச்சு மற்றும் விஷேட பாதுகாப்புப் படையினர், விஷேட உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என அனைவரும் அளவிலா சேவைகளைச் செய்து வருகின்றனர். அதனால் சவுதி மன்னர்களும் அந்நாட்டு மக்களும் அன்று தொட்டு இன்று வரை “ஹஜ், உம்ராச் செய்ய வரும் அல்லாஹ்வின் விருந்தாளிகளுக்கு சேவை செய்வது எமக்குப் பெருமைக்குரிய விடயம்” எனக் கூறக்கூடியவர்களாக உள்ளனர்.
இவ்வாறு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் நேரடி கண்காணிப்பில் சவுதி முன்னெடுத்து வரும் இந்த இணையற்ற சேவைகளை உலக மக்கள் பெரிதும் பாராட்டியே வருகின்றனர். தன் தந்தை மன்னர் சல்மானுடன் இணைந்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் இச்சேவைகளை சிறப்பாக முன்னெடுத்து கொண்டிருக்கிறார்.
இரு புனிதஸ்தலங்களையும் சிறப்பாகப் பராமரித்து வருகின்ற மன்னர் சல்மான், வருடாவருடம் தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இலவசமாக ஹஜ், உம்ராக்களை மேற்கொள்ளவும் வசதி அளிக்கின்றார். குறிப்பாக பலஸ்தீன மக்களுக்கும் உலகில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இந்த வசதி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் நிமித்தம் தன்னுடைய பெயரில் “மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மையத்தை” ஆரம்பித்து அளப்பரிய சேவைகளைச் முன்னெடுத்துள்ளார். அதனால் தான் அவருக்கு “மலிகுல் இன்ஸானிய்யா” – “மனிதநேய மன்னர்” என்ற பெயரும் “காதிமுல் ஹரமைன் அல் ஷரீபைன்” “இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர், ஊழியர்” எனும் பெயரும் சிறப்புப் பெயர்களாகச் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
இவை இவ்வாறிருக்க, இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் நீண்ட கால நட்புறவு நிலவி வருகிறது.
இந்தப்பின்புலத்தில் இலங்கையின் முன்னேற்றத்துக்கும் பாரிய உதவிகளை சவுதி நல்கி வருகிறது. மனிதாபிமான உதவிகள் என்ற அடிப்படையிலும் நீண்ட கால தவணை அடிப்படையிலும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உதவி ஒத்துழைப்புகளை அளித்துவரும் சிறந்த நாடாகவும் சவுதி திகழ்கிறது.
அண்மையில் கொழும்பு ஐடீசி ஹோட்டலில் நடைபெற்ற சவுதி அரேபியாவின் 95வது தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வில் சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் சஹ்தானியின் விஷேட உரையில், சவுதி அரேபியா இலங்கைக்குச் செய்துள்ள அனைத்து உதவி ஒத்துழைப்புகளையும் தெளிவாக எடுத்துரைத்தார். இத்தகைய பாரிய உதவிகளை சவுதி அரேபியா இலங்கைக்குக் அளித்துள்ளதா என அந்நிகழ்வில் கலந்து கொண்ட பலர் வியந்து நோக்கினர்.
அந்நிகழ்வில் பேசிய அரச சார்பு அமைச்சர் சவுதி அரேபியாவின் 95வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது, சவுதி அரேபியா இலங்கைக்கு ஆற்றியுள்ள பாரிய சேவைகளைப் பெரிதும் பாராட்டியதோடு மென்மேலும் சவுதி அரேபியா இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அத்தோடு சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக் கட்டணம் இனி இல்லை.
ஆக, சவுதி அரேபியாவையும் அதன் மக்களையும் நவீன யுகத்திற்கு ஏற்ப கட்டியெழுப்புவதிலும் முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதிலும் இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாலவரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தும், இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தும் அர்ப்பணிப்புக்களுடன் உழைத்து வருகின்றார். அவ்விருவரும் நவீன சவுதியை செதுக்கும் தனித்துவம் மிக்க தலைவர்களாக விளங்குகிறனர்.
இச்சந்தர்ப்பத்தில் மாண்பமிகு மன்னர் ஸல்மான் அவர்களுக்கு இதோ எமது விசுவாசத்தையும் அன்பையும் காணிக்கையாக்க விரும்புகிறோம், மாண்பமிகு மன்னர் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்தனை புரிகிறோம். இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மற்றும் அவரது நம்பிக்பிக்கை நட்சத்திரமான பட்டத்து இளவரசரையும் அன்பான சவுதி அரேபிய மக்களையும் பாதுகாக்கவும், எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்கிறோம். நாம் நேசிக்கும் அன்பான சவுதி அரேபியாவின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் அல்லாஹ்விடமே கேட்கிறோம்.
ஆகவே மன்னர் சல்மானினதும் பட்டத்து இளவரசரதும் நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதற்கான பணிகளை அங்கீகரித்து இறைவன் அருள் புரியட்டும். அவர்களது பணிகள் மென்மேலும் வெற்றி பெறட்டும். அதற்காக இலங்கை மக்கள் சார்பிலும் எமது நிறுவனத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் பிரார்த்திக்கிறேன்.

அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தின் மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்.
கொழும்பு