உள்நாடு

ஐ.நா பொதுச்சபையில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி அநுர

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15க்கு ஜனாதிபதி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்கா பயணமானார்.

இதன்படி அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 8.15க்கு அமெரிக்காவின் ஜோன் எப். கெனடி சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி சென்றடைந்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த சந்தரசிறி ஜெயசூரிய உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியை வரவேற்றிருந்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த பயணத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இணைந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதி அநுர குமார் திசாநாயக்க ஜப்பானுக்கு அரச பயணம் ஒன்றில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *