பிரதமர் பிரதமர் ஹரிணி அமரசூரியகோல்டன் லேடி, நடுநிலையோடு எதையும் அணுகக் கூடிய நல்ல சிந்தனையாளராக இருக்கிறார்; கொழும்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் பேச்சு
தமிழின் தொன்மையைப் பற்றி பேச எழுந்தால் இலங்கையையும் பேசிட முடியாது இலங்கை மண்னையும் இந்திய மண்னையும் அமைதிப் பூங்காவாகத் திகழ இறைவன் அருள் புரிவானாகவும். பிரதமர் பிரதமர் ஹரிணி அமரசூரிய
கோல்டன் லேடி. நடுநிலையோடு எதையும் அணுகக் கூடிய நல்ல சிந்தனையாளராக இருக்கிறார் என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று கொழும்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கான பராட்டு நிகழ்வும், இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்களின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வும் மகுட விழாவாக கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 19.09.2025 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இலங்கைப் பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோர் முதன்மை அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் துவக்க உரையாற்றினார்
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சாணக்கியன் ராசமாணிக்கம், எம்.எஸ்.உதுமாலெப்பை, கே. காதர் மஸ்தான், ஜனாதிபதியின் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், ஆசாத் சாலிஹ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், எம்.எஸ். நளீம், அலி சாஹிர் மௌலானா, எம்.எஸ்.எம். அஸ்லம், ஷபீக் ரஜாப்தீன் ஆகியோர் உட்பட அரசியல் முக்கியஸ்தர்களும், சமூக ஆர்வலர்களும் வருகை தந்திருந்தனர். அவர்களில் சிலரது கருத்துரைகளும் இடம்பெற்றன.
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே. நவாஸ் கனி, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜீ.எம். அக்பர் அலி, பெரு நகர சென்னை மாநகராட்சி (எழும்பூர்) கவுன்ஸிலர் பாத்திமா முஸப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன், முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்திய பாடகர்களான இறையன்பன் குத்தூஸ், தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜுதீன், இலங்கைப் பாடகர்களான இசைச் சுடர் கலைக்கமல் ,மருதமுனை கமால், மொய்னா பேகம், மொகிதீன் பேக் ஆகியோர் இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீபாவின் பாடல்களைப் பாடி இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினர்.
இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் எனும் உயரிய விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பற்றிய ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப் படத்தை சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனர் ஹாஜி சிராஜுதீன் அனுசரணையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் ஹாஜி என்.எம். அமீன், மணிச்சுடர் மற்றும் மக்கள் குரல் நாளிதழின் மூத்த ஊடகையாளர் திருச்சி எம்.கே. சாகுல் அமீது ஆகியோர் தயாரிப்பில் இந்த ஆவணப் படத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லாஹ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் ஆவணப் படத்தை வெளியிட்டனர்.
தமிழ்நாட்டு ஆளுமைகள் இருவருக்கான இந்த விழாவை இலங்கையில் விமரிசையாக நடத்தியதையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க. ஸ்டாலின், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பிய சிறப்புச் செய்தியை அவரது பிரதிநிதியாக வருகை தந்திருந்த பாராளுமன்ற முன்னாள் தி.மு.க. உறுப்பினர் எம்.எம். அப்துல்லாஹ், மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது வாசித்ததுடன், அதை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் நேரில் கையளித்தார்.
விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் ஏற்புரையில் பேசியதாவது :
இலங்கைச் சீமையில் அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் எனும் புதிய தலைப்போடு மிகச் சிறப்பான விழாவை இந்த பண்டாரநாயக்க நினைவு கேளரங்கில் விமரிசையாக ஏற்பாடு செய்து, எழுச்சியுடன் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், இலங்கை முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், என் அன்புச் சகோதரருமான ரஊஃப் ஹகீம், அவருடன் இணைந்து இவ்விழாவை சிறப்புற நடத்திக் கொண்டிருக்க கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ரிஷாத் பதீயுத்தீன், இலங்கை முஸ்லிம் மீடியா ஃபோரம் அமைப்பின் தலைவர், மிகச் சிறந்த ஊடகவியலாளர் கலாபூஷணம் அன்புச் சகோதரர் என்.எம். அமீன் உள்ளிட்ட அவையோரையும், பார்வையாளர்களையும் துவக்கமாக நான் வாழ்த்தி வரவேற்கிறேன்.
இங்கு வந்திருக்கும் பலரது பெயர்கள் எனக்கு நினைவில் இருக்கின்றன. சிலரது பெயர்கள் மறந்தும் போயிருக்கின்றன. உங்கள் அத்தனை பேரையும் பெயர் குறிப்பிட்டு விளக்கிச் சொல்லி விளிக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், நேரத்தின் அருமை கருதி அனைவரையும் ஒட்டுமொத்தமாக வரவேற்கிறேன்.
இவ்வளவு சிறப்பிற்குரிய இந்த நிகழ்ச்சி இங்கு இப்படி நடைபெறும் என்று நான் கற்பனையில் சிந்தித்ததும் இல்லை; எதிர்பார்த்ததும் இல்லை. ஆனால் நான் எதிர்பார்த்திராத, கற்பனையில் கூட நினைத்திராத இந்த நல்ல நிகழ்ச்சி நடைபெறுவதற்கு, தமிழ்நாட்டில் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு திராவிட மாடல் நல்லாட்சியை – இந்தியாவின் அனைத்து மாநிலங்களது மக்களும் – நமது மாநிலத்தில் இப்படி ஓர் ஆட்சி வர வேண்டாமா என்று ஏங்கி எதிர்பார்க்கும் வகையில் சிறப்புற நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய முழுமுதற் காரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
முஸ்லிம் சமுதாயத்தின் மீதும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீதும், என் மீதும் கொண்டுள்ள அளவிலா அன்பு, அபிமானம் காரணமாக – தமிழ்நாடு அரசின் மிக உயரிய விருதான தகைசால் தமிழர் விருதை இவ்வாண்டு நம்முடைய முதலமைச்சர் இந்த எளியவனுக்கு வழங்கி இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த நல்ல விழாவைப் பயன்படுத்தி என் சார்பாகவும், உங்கள் அனைவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
தமிழ் மொழியில் முஸ்லிம் சமுதாயத்தின் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள், கவிஞர்கள் – புதுப்புது வரம்புகளையெல்லாம் உருவாக்கி, புதுப்புது நெறிகளை ஏற்படுத்தி, அற்புதமான காவியங்களைப் படைத்து, பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள புலவர்கள் மட்டுமின்றி, இலங்கையைச் சார்ந்தவர்களும், உலகெங்கும் உள்ள தமிழ்ப் புலவர்களும், கவிஞர்களும் இந்த அற்புதமான படைப்பைச் செய்தமைக்காக அவர்கள் அனைவரையும் பாராட்ட வேண்டிய அவசியத்தில் தமிழ்நாடு அரசு இருக்கிற காரணத்தால்தான், அவை அத்தனைக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில், இந்த தகைசால் தமிழர் விருதை இந்த எளியவனுக்கு வழங்கி இருக்கிறார். இதன் மூலம், அத்தனை தமிழ் புலவர்களையும், அறிஞர்களையும், சான்றோர்களையும், தமிழ் மொழிக்காக எல்லா வகையிலும் பங்களிப்புச் செய்த அனைவரையும் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
முதலமைச்சர் அவர்களின் இந்த அழகிய ஆட்சியில் தகைசால் தமிழர் எனும் விருதை ஐந்தாவது ஆண்டாக நமக்கு வழங்கியதோடு நில்லாமல், அடுத்த சில நாட்களில் சென்னையில் நடைபெறவிருக்கும் நபிகள் நாயகத்தின் 1500ஆவது பிறந்தநாள் விழாவிலும் தலைமை ஏற்று சிறப்பிக்கவிருக்கிறார். இவற்றுக்கெல்லாம் சேர்த்து அவருக்கு தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமின்றி, இங்குள்ள அனைத்து முஸ்லிம்களும் இணைந்து பாராட்டவும், மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
“இதுவரை நான் 470 மீலாது விழா கூட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னது இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. நபிகளாரின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை அறிவித்து, ஒவ்வோர் ஆண்டும் கலைவாணர் அரங்கில் நபிகளாரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகவே நடத்தியது ஒரு காலத்து வரலாறு. இடையில் தொய்வுற்று இருந்த அந்த வரலாற்றை மீண்டும் தொடரச் செய்யும் வகையில் தான் நமது முதலமைச்சர் அவர்கள் – அவரே முன்னின்று நபிகளாரின் 1500ஆவது பிறந்தநாள் விழாவை நடத்தி சிறப்பிக்கவிருக்கிறார் என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
இங்கே நான் நிறைய பேச விரும்பவில்லை. சில முக்கியமான கருத்துகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொண்டு எனது உரையை முடிக்கிறேன்.
தமிழ் மொழி உலக மொழிகள் அனைத்துக்கும் தாய்மொழி. தமிழ் மொழியில் இருந்துதான் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் பிறந்து எழுந்தன என்பது ஆயிரக்கணக்கான ஆய்வுகளின் வழியே பதிவு செய்யப்பட்டுள்ள வரலாறு. இந்த தமிழ் மொழி தோன்றிய இடம் – இன்றைய தமிழ்நாட்டையும், இலங்கையையும், மடகாஸ்கர், சஊதி அரபிய்யா உள்ளிட்ட பகுதிகளையும் உள்ளடக்கிய லெமூரியா கண்டம் அல்லது குமரிக்கண்டம்தான். லெமூரியா கண்டத்தின் புவியியல் வரைபடம் அன்று அப்படித்தான் பதிவாகி இருக்கிறது.
தமிழின் தொன்மையை, அதன் தொடக்கத்தைப் பேச எழுந்தால் – இலங்கையையும் இணைக்காமல் பேசிட இயலாது. அதுபோல முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் பங்களிப்பு என்று பேச முனைந்தாலும் இலங்கையைத் தொடாமல் பேச முடியாது.
நான் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், முன்னர் மகாத்மா காந்தி அவர்களின் செயலாளராகச் செயல்பட்ட பண்டிட் சுந்தரலால் அவர்கள் எழுதிய கீதா அன்ட் குர்ஆன் எனும் நூலை நான் கல்லூரி நூலகத்தில் காண நேர்ந்தது. அதில் இறைவன் ஒருவன் என்றும், அல்லாஹ் என்கிற பெயர் வேத காலத்திலேயே “எல்லா” எனும் பெயரில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்றும், ரிக் வேதத்தில் அந்தக் குறிப்பு சொல்லப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்புகள் உள்ளன.
அந்த “எல்லா” என்கிற இறைவனை அழைக்கும் பெயர் இந்தியா முழுக்க பரவி, அந்தக் கடவுளை, ஓர் இறையை, எல்லாவை, ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்த மக்களை எல்லமைட்ஸ் என்று அழைக்கும் பழக்கம் இருந்தது. சங்க இலக்கியத்தில் பார்க்கும் பொழுது, 95 இடங்களில் “எல்லா” என்ற சொல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியத்தில் “எல்லே இலப்பம்” என்று வருகிறது. அல்லாஹ் அல்லாஹ் என்று இப்பொழுது நாம் சொல்வது போல எல்லா எல்லா என்று அன்று இறைவனை அழைத்து இருக்கிறார்கள்.
ஆதி மனிதர் ஆதம் அவர்களது காலத்திலேயே “எல்”லை நோக்கி மக்களை இணைக்கவே அவர் அழைத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. எல் என்றால் ஒளிமயமான இறைவன் என்று பொருள். முதலில் இந்தியா முழுக்க பரவிய இந்த “எல்” எனும் இறைவன் மீதான நம்பிக்கை, பிறகு படிப்படியாக பாபிலோனுக்கும், சுமேரியாவுக்கும் பரவியது.
நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களது காலத்திலும் இறைவனை “எல்” என்று அழைத்திருக்கிறார்கள். “எல்லி எல்லிலாமா சபக்தானி” என்று பைபிளில் ஒரு வசனம் வருகிறது. “எல்” என்றால் இறைவன். “எல்லி” என்றால் எனது இறைவா என்று பொருள். என் தேவனே என் தேவனே என்பதைத்தான் எல்லி எல்லி என்று விளித்திருக்கிறார் இயேசு என்ற நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம்.
இப்படி பரவலாக “எல்” என்ற சொல் இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்த பிறகுதான் – இது எங்கிருந்து தொடங்கியது என்ற கேள்வி எனக்குள் எழுந்து, அதன் அடிப்படையில் ஆய்வைத் தொடங்கினேன்.
இந்த தமிழ் மண்ணில் ஆதிகாலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த – ஒன்றே குலம் ஒருவனே தேவன், யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ஆகிய வாழ்வியல் முழக்கங்கள்தான் இஸ்லாம் என்ற பெயரிலும் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுதான் இஸ்லாம் மார்க்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எல்லப்பன், எல்லாஹி, எல்லம்மன், எல்லா என 95 இடங்களில் சங்க இலக்கியத்தில் இந்த சொல் பயன்படுத்தப்பட் திருக்கிறது. அந்த எல்லா என்ற சொல்தான் உலகம் முழுக்க பல்கிப் பரவி, பிறகு அது அல்இலாஹ் என்று மாறி, அல் அல்லாஹ் என்றாகி, அரபு நாட்டிலிருந்து அல்லாஹ் என்று மருவி வந்திருக்கிறது. நபிகளாரின் தந்தை பெயர் அப்துல்லாஹ். அதிலும் அல்லாஹ் இருக்கிறது. அல்லாஹ் என்ற இந்தப் பெயர் அரபுலகில் மிகவும் புகழ்பெற்ற பரவலான பெயர். நபிகள் நாயகம் பிறப்பதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர் அங்கே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
ஆக எல் எனும் ஓரிறைவனை வணங்கி வந்த நாடுதான் நமது இந்திய நாடு என்பது இந்த ஆய்வுக் குறிப்புகளில் இருந்து புலனாகிறது. இந்தத் தகவல்களையெல்லாம் ஒன்றுதிரட்டிதான் ஒரு கட்டுரையை நான் தொகுத்து எழுதி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நடத்திய செம்மொழி மாநாட்டில் அதைச் சமர்ப்பித்தேன். அதை இறுதி செய்வதற்காக – மூன்று சான்றோர்கள், அறிஞர்கள் என் முன் அமர்ந்து, அது தொடர்பான கேள்விகளைக் கேட்க, நான் அவற்றுக்கு பதில் விளக்கங்களை வழங்க, அதன் அடிப்படையில் எனது அந்த ஆய்வுக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆக இஸ்லாம் மார்க்கம் இங்கு ஆரம்பத்திலேயே பின்பற்றப்பட்டு வந்த நிலையில் இங்கிருந்து போய் அரபுலகில் இருந்து திரும்பி வந்ததே தவிர, எங்கிருந்தோ புதிதாக இந்த இந்திய மண்ணுக்கு, தமிழ் மண்ணுக்கு, இலங்கை மண்ணுக்கு வந்த மதம் அல்ல. ஒரு காலத்தில் “எல்லா” என்றழைக்கப்பட்ட இறைவனின் பெயர் வெளியே போய் “அல்லாஹ்” என்று மருவி வந்திருக்கிறது, அவ்வளவுதான். இதுதான் இந்தத் தலைப்பிலான எனது மொத்த ஆய்வின் சுருக்கம்.
எளியவனான எனக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் அவர்கள் தகைசால் தமிழர் விருதை வழங்குவதற்கு முன்பு – நான் தமிழுக்காக, நம் சமூகத்திற்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்பனவற்றையெல்லாம் அந்த விருது குறித்த அறிமுகவுரையில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். நான் மேலே சொன்ன ஆய்வுக் கட்டுரை குறித்த தகவலும் விருது குறித்த அந்தக் குறிப்புரையில் இடம் பெற்றிருக்கிறது என்பதைச் சொல்வதற்கே இதை நான் இங்கே விளக்கிக் கூறி இருக்கிறேன்.
இங்கிருந்து சென்ற ஓரிறைக் கொள்கை இஸ்லாம் மார்க்கம்தான் மீண்டும் அரபுலகில் இருந்து நபிகள் நாயகம் அவர்கள் மூலமாக – திருமறை குர்ஆனை வேதமாகக் கொண்டு திரும்பி வந்திருக்கிறது. ஆக, இந்தியாவில் வாழும் இந்திய முஸ்லிம் சமுதாயம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதல் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் வலியுறுத்தியது போல, இறைவேதமான இந்த திருக்குர்ஆனை தங்களது ஒரு கரத்திலும், இந்திய அரசியல் சாசன சட்டத்தை மறு கரத்திலும் உயர்த்திப் பிடித்து, அவற்றின் படி வழுவாமல் ஒழுகி வாழ வேண்டும்.
அதைத்தான் அடுத்தடுத்து வந்த தலைவர்களும் எங்களுக்கு வலியுறுத்தி இருக்கிறார்கள். இன்றும் அதைத்தான் நாங்கள் இந்திய முஸ்லிம்களுக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில்தான் அவர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். “ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா – உலகத்திலேயே தலைசிறந்த நாடு இந்திய நாடு” என்று பெருமிதம் கொள்ளும் வகையில், வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, உலகுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்திய முஸ்லிம் சமுதாயம் எப்படி இறைமறை குர்ஆனை ஒரு கையிலும், இந்திய அரசியல் சாசன சட்டத்தை மறுகையிலும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்களோ, அதையே இந்த இலங்கையில் – இறை வேதத்தை ஒரு கையிலும், இங்குள்ள அரசின் சட்ட விதிகளை மறு கையிலும் உயர்த்திப் பிடித்து, வழுவாமல் ஒழுகி, பின்பற்றி வாருங்கள் என்றும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தமது ஒரு கையில் திருமறை குர்ஆனையும், இன்னொரு கையில் அந்தந்த தமது நாட்டின் அரசியல் சாசன சட்டத்தையும் உயர்த்திப் பிடித்து, பின்பற்றி வர வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதே எனது உரையின் நோக்கமாக இருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் அப்படி வாழும் காலமெல்லாம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை வலுவாகப் பாதுகாக்கும் காலமாகத் திகழும்.
இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் மார்க்க சட்டங்களை, மனிதர்களுக்கு தேவையான மார்க்க தீர்ப்புகளை வெளியிட எத்தனிக்கும்போது, தனது சீடர்கள் 40 பேர் என்றால் அவர்களில் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருந்தாலும், அவரையும் அழைத்து, விளக்கிச் சொல்லி, புரிதலை ஏற்படுத்தி, அந்த 40 பேரும் ஒன்றுபட்டு இந்த ஒரு கருத்திற்குள் வந்த பிறகே அதை சட்டமாக அறிவிக்கும் வழமையைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று கண்ணியத்திற்குரிய உலமாக்கள் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்திய மக்களுக்கு, இந்திய முஸ்லிம்களுக்கு எதை நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோமோ அதைத்தான் இங்கே இந்த விழாவின் மூலமாக இந்த நாட்டு மக்களுக்கும் நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். உங்கள் ஒரு கையில் இறைமறை குர்ஆனையும், இன்னொரு கையில் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகத்தையும் உயர்த்திப் பிடித்து, வழுவாமல் ஒழுகி வாருங்கள் என்பதுதான் அந்த வலியுறுத்தல்.
கண்ணியத்திற்குரிய இந்த விழா ஏற்பாட்டாளர் ரஊஃப் ஹகீம் அவர்கள் உள்ளிட்ட நண்பர்களோடு வெள்ளிக்கிழமை காலையில் உங்கள் இலங்கை நாட்டின் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அவரிடத்தில் தமிழ்ச் சமூகத்துடைய, மீனவ சமூகத்துடைய சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து எங்கள் நீதியரசர் அக்பர் அலி அவர்கள் மூலமாக விளக்கி இருக்கிறோம். அவர் மனம் திறந்து எங்கள் யோசனைகளை உள்வாங்கிக் கொண்டு, “அற்புதமான யோசனைகளைத் தந்திருக்கிறீர்கள்… இவையனைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டியவை… விரைவில் இதுகுறித்து பரிசீலிக்கிறோம்” என்ற நல்ல ஆதரவான ஒரு செய்தியையும் தந்து சென்றிருக்கிறார். அதற்காக அவருக்கும் இந்த விழாவில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நாட்டுக்கு வாய்த்துள்ள இந்தப் பிரதமர் பிரதமர் ஹரிணி அமரசூரிய
கோல்டன் லேடி. நடுநிலையோடு எதையும் அணுகக் கூடிய நல்ல சிந்தனையாளராக இருக்கிறார் என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன். இவர்களில் மூலமாக இந்த நாடு நல்ல முன்னேற்றத்தைக் காணும். இந்த இலங்கை நாடும், இந்தியாவும் எல்லா விதங்களிலும் முன்னேறி சிறக்க இந்த நல்ல நேரத்தில் நாமெல்லாம் விருப்பத்தை வைப்போம்.
நாம் அனைவரும் முதலில் மனிதர்களே. அவரவர் வாழும் இடம், சூழலுக்கு ஏற்ப – அவர்களுடைய சாதி உள்ளிட்ட பாகுபாடுகள் வந்து விடுகின்றன என்றாலும், நாட்டின் ஒற்றுமை – ஒருமைப்பாடு என்று வரும்பொழுது, அந்தப் பாகுபாடுகளையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ஒரே அடையாளத்துடன் ஒருங்கிணைந்து நாம் செயல்படுவோமேயானால், நம்மை யாரும் பலவீனப்படுத்தி விடவே முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“ஒரு வன் எப்படி இருந்தால் அவன் மனிதனாகக் கருதப்படுவானோ அப்படி இருப்பவனுக்குப் பெயர்தான் முஸ்லிம்” என்று ஒரு முஸ்லிமுக்கு பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அழகான வரைவிலக்கணத்தைத் தந்திருக்கிறார். ஆக, நல்ல மனிதர்களாக நாம் வாழ்வோம். நல்ல முஸ்லிம்களாக, முன்னுதாரணமாகத் திகழ்வோம்.
இங்கே இஸ்ரேல் நாடு ஃபலஸ்தீன் மீது நடத்தும் அடக்குமுறைகள், அத்துமீறல்கள் குறித்தெல்லாம் பேசப்பட்டிருக்கின்றன. அனைவரின் பொறுமையையும் இழக்கச் செய்திடும் இந்த மாபாதகச் செயல்களில் இருந்து ஃபலஸ்தீனத்திற்கு நல்ல விடிவு வர வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை நாம் அனைவரும் வேண்டிட கடமைப்பட்டிருக்கிறோம்.
அந்த நாட்டிலும், உலகில் எங்கெங்கெல்லாம் அப்பாவி மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்களோ அத்தனை பகுதிகளிலும் மக்கள் மீதான கொடுமைகள் முற்றிலுமாக நீங்கி, நலமும் – வளமும் அவர்கள் மீது தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனிடம் – கொஞ்ச நேரம் எதையும் மறந்து, இதயம் திறந்து வேண்டிடுவோம். சக மனிதர்கள் – அவர்கள் யார் எவர் என்று பாராமல், அனைவரையும் போற்றக்கூடிய, அனைவரோடும் இணக்கத்தோடு வாழக்கூடிய நல்ல சூழலை நாம் நமக்குள் உருவாக்கிக் கொள்வோம், வலுப்படுத்திக் கொள்வோம். அதையே நமது அடுத்த தலைமுறைக்கும் வலியுறுத்தி பழக்கப்படுத்துவோம்.
ஒன்றை மட்டும் கூறி எனதுரையை முடிக்கிறேன். இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களாகிய நமக்கு இந்த உலகில் விரோதிகள் என்று யாருமே கிடையாது என்பதுதான் நபிகள் நாயகம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த, வலியுறுத்திய மிக முக்கியமான பாடம். இதை ஒருபோதும் நாம் மறந்து விடக்கூடாது. ஒரு முஸ்லிமுக்கு விரோதி என்று உலகில் யாரும் இல்லை. அவனிடத்தில் உள்ள ஷைத்தான் மட்டுமே அவனுக்கு விரோதி என்கிறது இறை மார்க்கம் இஸ்லாம். ஆக – அண்டை வீட்டுக்காரனோ, எதிர்வீட்டுக்காரனோ, அடுத்த தெருக்காரனோ, அடுத்த மொழி, சாதி, அண்டை நாட்டுக்காரனோ நமக்கு எதிரிகள் அல்ல. அப்படி அவர்கள் மீது விரோதம் கற்பிப்பதை இறை மார்க்கம் இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.
ஆக நமக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் ஷைத்தானின் ஊசலாட்டங்களை, ஆட்ட பாட்டங்களை முறியடித்து, இறைவன் வகுத்துத் தந்த வழியில் – இறைத்தூதர் வழிநடத்திய முறையில் நமது வாழ்வை சிறப்புற அமைத்துக் கொள்வோம். மனிதர்களுக்கு இடையே பிணக்குகள் நீங்கி, இணக்கம் தழைப்பதற்கும் – வலுப்பெறுவதற்கும் நம்மால் ஆன எல்லா முயற்சிகளையும், எல்லாத் தருணங்களிலும் நமது சக்திக்கு உட்பட்ட வரையில் தொடர்ந்து செய்து வருவோம்.
உலகில் வாழும் மனித சமுதாயம் அனைவருமே அண்ணன் – தம்பி உறவு முறையோடு ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து வாழவும், அதன் மூலம் சமுதாயம் மேம்படவும் நம்மாலான எல்லா பங்களிப்புகளையும் நிறைவாகச் செய்திடுவோம். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு முழுமையாக நல்லருள் புரிந்திட வேண்டும் என்று துஆ செய்கிறேன். கருணையுள்ள இறைவன் இந்த இலங்கை மண்ணையும், எங்கள் இந்திய மண்ணையும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்வானாக. இங்குள்ள மக்களை ஒருவருக்கொருவர் நேசிக்கும் நன்மக்களாக என்றென்றைக்கும் ஆக்கித் தருவானாக.
இங்கே இந்தியாவிலிருந்து திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பல மட்டங்களில் உள்ள நிர்வாகிகள் – பொறுப்பாளர்களெல்லாம் இந்த எளியவனைப் பாராட்டும் இந்த இனிய விழாவில் பங்கேற்பதற்காக ஆவலோடு வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கும், இந்த இலங்கை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆவலோடு வந்து கலந்து கொண்டிருக்கும் உங்கள் யாவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்து, இந்த நல்ல வாய்ப்புக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழகம், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும், தமிழகத்தில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கல்விமான்களும், தொழிலதிபர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.




(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)