மினுவங்கொடை நகரசபை கிண்ணம்; மகுடம் சூடியது கல்லொழுவ அல் அமான்
மினுவங்கொடை நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பாடசாலை அணிகளுக்கு இடையாலான உதைப்பந்தாட்டப் போட்டியில் நாலந்தா ஆண்கள் கல்லூரியை 3:0 என வீழ்த்தி சம்பியன் மகுடத்தை தனதாக்கியது கல்லொழுவ அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயம்.
ஆளும் அரசின் “வளமான நாடு, அழகான வாழ்க்கை” செயற்திட்டத்தின் அடிப்படையில் மினுவங்கொடை நகர சபையின் நகரபிதா அசேல விக்ரமாராச்சி தலைமையில் உதவி நகரபிதா சுரைய்யா வின் பங்கேற்புடன் மினுவங்கொட கல்வி வலயத்திற்கு உட்பட்ட மினுவங்கொடை ஜனாதிபதி கல்லூரி, மினுவங்கொட புருலுபிட்டிய கல்லூரி, மினுவங்கொடை நாலந்தா ஆண்கள் கல்லூரி மற்றும் மினுவங்கொடை கல்லொழுவ அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகளின் 16 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணிகள் பங்கேற்றிருந்தன.
அதற்கமைய இப்போட்டியின் முதல் சுற்று லீக் முறையில் இடம்பெற அதில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையுடன் குழுநிலையில் முதலிடம் பிடித்த கல்லொழுவ அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. இதில் ஜனாதிபதி கல்லூரியை 4:0 என்ற கோல்கள் வகத்தியாசத்திலும், நாலந்தா ஆண்கள் கல்லூரியை 1:0 என்ற கோள் வித்தியாசத்திலும் வெற்றி கொண்டதுடன் புருலுபிட்டிய கல்லூரிக்கு எதிரான போட்டியை 1:1 என சமன் செய்திருந்தது.
மேலும் குழு நிலையில் இரண்டு வெறுறிகளுடன் 2ஆம் இடம்பிடித்த நாலந்தா ஆண்கள் கல்லூரி இறுதிப் போட்டியில் அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாத இறுதிப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோலுக்கான முயற்சியில் தீவிரம் காட்டினர். இருப்பினும் முதல் பாதி ஆட்டம் எந்த வித கொல்களும் இன்றி சமநிலையுடன் நிறைவடைந்தது.
பின்னர் தொடர்ந்த தீர்க்கமான 2ஆவது பாதி ஆட்டத்தில் அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இதனால் 2ஆவது பாதி ஆரம்பத்தில் யூனுஸ் பெற்ற கோலுடன் 1:0 என முன்னிலை பெற்றது. பின்னர் சில நிமிடங்களில் யூனுஸ் தன் கோல் கணக்கை இரட்டிப்பாக்க 2:0 என அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி வெற்றியை அன்மித்தது. தொடர்ந்த போட்டியின் இறுதி நிமிடத்தில் அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணிக்காக உமைர் 3ஆவது கோலை உட்செலுத்தி வெற்றியை உறுதி செய்ய போட்டியின் முழு நேர ஆட்டமும் நிறைவடைய 3:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நாலந்தா ஆண்கள் கல்லூரியை வெற்றி கொண்ட அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி மினுவங்கொடை நகரசபை உதைப்பந்தாட்ட தொடரின் செம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டு அசத்தியது. இத் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணியின் யூனுஸ் தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் வெற்றி குறித்து கல்லொழுவ அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.டி.எம். ஆஸிம் கருத்து வெளியிடுகையில் “இவ் வெற்றிக்கு பின்னால் நின்று உழைத்த ஆசிரியர்களான ஹிப்ருல்லா
உடற்கல்வி ஆசிரியர் அதாப், ஆசிரியர் சௌபாத்,
உதைப்பந்தாட்ட தலைமைப் பயிற்றுவிப்பாளர் சதாம் ஆகியோருக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இந்த முன்னேற்றத்திற்கு பக்க பலமாக இருக்கும் அல் அமானின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அல் அமானின் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எமது நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.







(அரபாத் பஹர்தீன்)