உள்நாடு

ஒரு கட்சி மட்டுமே சகல அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என கருதும் ஜனநாயக விரோத ஆட்சிச் சிந்தனையை தோற்கடிக்க நாமனைவரும் ஒன்றிணைவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து வருகின்றது. மரண உதவிச் சங்கம், விவசாயிகள் சங்கம், மீனவர் சங்கம், இளைஞர் கழகம் முதல் மதஸ்தலங்களின் பரிபாலன சபை வரை அனைத்தையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகின்றனர். சகல சமூக அமைப்புகளினதும் அதிகாரத்தை, கட்டுப்பாட்டை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். தற்போது சுயாதீன சிவில் பாதுகாப்புக் குழுவிற்கும் கூட அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பிற்காக சிவில் பாதுகாப்பு குழுக்கள் நிறுவப்பட்டன. சகல கட்சிகளினது உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து இதில் வேலை செய்தனர். இன்று சிவில் பாதுகாப்பு குழுவிற்கான நியமனப் பட்டியல்களை ஜேவிபி எம்.பி.க்களே நியமிக்கின்றனர். கிராமத்தில் நல்லதொரு அமைப்பு இருந்தால் இதுபோன்ற நியாயமற்ற நியமனங்களைத் தடுக்க முடியும். ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட இடத்தில் அரசாங்கத்தின் சூட்சும முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, நாம் அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். இந்த அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிராக நாம் ஒழுங்கிணைந்து அணிதிரள வேண்டும். அது நடந்தால், தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒற்றைக் கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவை மக்களால் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *