இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா
இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸன்னா வல் ஜமாஅத் இறைந்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் 1500 வது வருட ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த மீலாதுன் நபி விழாவும் புனித ஸப்ஹான மௌலித் மஜ்லிஸும் கொழும்பு – 06, வெள்ளவத்தை மெரீன் கிரேண்ட் வரவேற்பு மண்டபத்தில் 20 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் தலைவர் டாக்டர் அல் ஹாஜ் பஹ்மி இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இவ்வைபத்தில் கொழும்பு உம்மு ஸாவியா பிரதம இமாமும் அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரி முதல்வருமான கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல் ஹாஜ் அஹ்மத் ஸ_பி (மஹ்ழரி) பேருவளை சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் பலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல் ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ ஏ) அக்கலாபீட முதல்வர் மௌலவி எம். அஸ்மிகான் (முஅய்யிதி) உட்பட உலமாக்கள், ஸாதாத்மார்கள், பிரமுகர்கள் மற்றும் இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தலைவர் டாக்டர் பஹ்மி இஸ்மாயில் இங்கு உரையாற்றும் போது இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட கல்வி, ஆன்மீகக் கல்வி, சமய, சமூக மற்றும் பொதுப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அல் ஹாஜ் தலஅத் இஸ்மாயிலின் சேவைகள் குறித்தும் அவர் இங்கு ஞாபகமூட்டினார். இவ்வமைப்பின் செயல் திட்டங்களுக்கு தனவந்தர்கள், மற்றும் பரோபகாரிகள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார். எதிர்காலத்தில் மேலும் பல செயல் திட்டங்களை மேற்கொள்ளவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.







(பேருவளை பீ.எம் முக்தார்)