கல்முனை அஷ்ரப்ஞாபகார்த்த வைத்தியசாலையில் க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் அழைப்பின் பேரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர, பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ உட்பட வைத்தியர்கள், வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், தாதியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மூன்று மாடிகளைக்கொண்ட இக்கட்டிடமானது சுகாதார அமைச்சின் சுமார் 150 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் வைத்தியசாலையின் ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.
எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை தான் எடுப்பதாகத் தெரிவித்ததோடு, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களிடம் உறவாடி, அவர்களது நலன் தொடர்பாக விசாரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர, பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
