விகிதாசார முறைமையே தேர்தலை காலம் தாழ்த்திச் செல்லக் காரணம்; தேர்தல் ஆணையாளர்
“விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாண சபை முறைமையை விகிதாசார முறைமையாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணமாகும்.” -இவ்வாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் யாழ். ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தச் சட்ட வரைமுறையால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது. இது தீர்க்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல் நடைபெறும். அதற்குத் திணைக்களம் தயாராக இருக்கின்றது. அல்லது குறித்த தீர்மானத்தைத் தற்போது பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையூடாக நிறை வேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடி யும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது.” – என்றார்.