உள்நாடு

சிறப்புற இடம்பெற்ற அகில இலங்கை மஜ்லிஸுல் உலமாவின் மீலாதுன் – நபி பெரு விழா

அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா, 36 ஆவது வருடமாக நடாத்திய மீலாதுன் – நபி மாபெரும் விழா, கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, கொழும்பு – 10, மருதானை, ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில், வெகு விமர்சையாக நடந்தேறியது.

இம்முறை, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் 1500 ஆவது வருட நினைவு தினமாகக் கொண்டாடப்பட்டமை விசேட அம்சமாகும் என, மஜ்லிஸுல் உலமாவின் செயலாளர் மௌலவி முஹம்மத் சிராஜுத்தீன் (நஜாஹி) பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். அல் ஆலிம் அஸ் – ஸெய்யித் அலி ஹுஸைன் மௌலானா (முர்ஸி) அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மாபெரும் சிறப்பு விழாவில், அஷ் ஷேக், அஸ் – ஸெய்யித் ஜிஃப்ரி பின் முஹம்மது ஜிஃப்ரி மௌலானா அவர்கள், அஷ் ஷேக், அஸ் – ஸெய்யித் முஹம்மது அஷ்ரஃப் மௌலானா அவர்கள், அல் ஆலிம், அஸ் – ஸெய்யித் அப்துர் ரஹீம் மௌலானா அவர்கள் ஆகியோர், “பைத்” முழக்கத்துடன் கௌரவமாக வரவேற்கப்பட்டு, கண்ணியமிக்க உலமாக்களினால் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இச்சிறப்பு நிகழ்வில், மாத்தளை – “அந்நஜாஹ்” அரபிக் கல்லூரி உஸ்தாத் அல் ஆலிம் கதாபி (நஜாஹி – காதிரி), தமிழ்நாடு – மேலப்பாளையம், “பஹ்ருல் உலூம்” பெண்கள் அரபிக் கல்லூரி நிறுவனர் அல் ஆலிம் ஹாஃபிழ் முஸ்தபா மஸ்லாஹி (எம்.ஏ.), பேருவளை – “மத்ரஸதுஸ் ஸகீனா” ஹிப்ழுல் குர்ஆன் தலைமை ஆசிரியர் அல் ஆலிம் ஹாஃபிழ் தீன் முஹம்மத் (மஹ்ழரி – காதிரி) ஆகியோர் விசேட பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர்.

மஜ்லிஸுல் உலமாவின் செயலாளர் மௌலவி முஹம்மத் சிராஜுத்தீன் (நஜாஹி) அவர்கள் நன்றி உரை நிகழ்த்த, மருதானை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் கதீப் மௌலவி எம்.எஸ்.எம். அஹ்ஸன் (ரவ்ழி) துஆப் பிரார்த்தனை புரிந்தார். இறுதியாக, “யா நபீ” பைத் ஸலவாத்துடன் இம்மாபெரும் விழா, இனிதே நிறைவு பெற்றதாக, செயலாளர் மௌலவி முஹம்மத் சிராஜுத்தீன் தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு – ஹிஜ்ரி 1410 – ரபீஉனில் அவ்வல் மாதம், அஷ் ஷேக் ஹம்ஸா பாவா நாயகம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு, மர்ஹூம் அல் ஹாஜ் உஸ்தாத் முஹாஜிரீன் நத்வி ஹஸ்ரத் அவர்கள், மௌலவி பத்ருத்தீன் ஷர்க்கி அவர்கள், மர்ஹூம் அஸ் ஸெய்யித் ஜமாலிய்யா ஹாரிஸ் மௌலானா அவர்கள், மர்ஹூம் அல் ஹாஜ் அல் உஸ்தாத் முஹம்மத் மிஸ்பாஹி அவர்கள், ஆகிய மூத்த ஆலிம்களினால் முழு மூச்சாக நின்று சிறந்த முறையில் வழி நடாத்தப்பட்டு வந்த இந்த மஜ்லிஸுல் உலமா, இன்று பல நூற்றுக்கணக்கான ஆலிம்களின் ஒத்துழைப்புக்களுடன் நாடளாவிய ரீதியில் பல கிளைகள் அமைக்கப்பட்டு, வெற்றிகரமாக முன்னேறி வருகிறது என்பதோடு, இந்த “மஜ்லிஸ் உலமா ஈ அஹ்லுஸ் ஸுன்னா”, கியாமம் நாள் வரை சத்தியத்தின் களமாக வீறு நடைபோட எல்லாம் வல்ல அல்லாஹ்வை “மஜ்லிஸுல் உலமா” வின் ஆலிம்கள் சார்பாக பிரார்த்திப்பதாகவும், செயலாளர் மௌலவி சிராஜுத்தீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *