தீர்க்கமான போட்டியில் இன்று வங்கப் புலிகளை எதிர்கொள்ளும் இலங்கைச் சிங்கங்கள்
17ஆவது ஆசியக் கிண்ணம் ரி20 தொடரின் முக்கியமான குழு பி இற்கான போட்டியில், இலங்கை அணி பங்களாதேஷ் அணியை இன்று (செப்டம்பர் 13) எதிர்த்தாடுகின்றது.
இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் அடுத்த கட்ட தகுதிக்கான முக்கியமான போட்டியாகும். இப் போட்டி அபுதாபியின் ஷெய்க் ஸாயத் சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும் இத் தொடரில் பங்களாதேஷ் அணி தான் சந்தித்த ஹொங் கொங் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பெற்று புள்ளிக் கணக்கை ஆரம்பித்திருந்தது.
மேலும் பங்களாதேஷ் அணியின் கேப்டனாக லிட்டன் டாஸ் செயல்படுகிறார். மேலும் துடுப்பாட்டம் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களாதேஷ் அணி இளம் வீரர்களை உள்ளடக்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க செயல்படுகிறார். அவருடன் துடுப்பாட்ட வீரர்களாக பெத்தும் நிசங்க, குசால் மெண்டிஸ் , குசல் பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் சகலதுறை வீரர்களாக கமில் மிஸார, தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் இன்றைய போட்டியில் முக்கிய பங்கு வகிப்பர். அத்துடன் பந்துவீச்சில் மதீஷ பத்திரன, துஷ்மந்த சமீர ஆகியோருடன் சுழல்பந்து வீச்சாளராக ஹேமந்த இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இத் தொடரின் அட்டவணைப் படி குழு நிலையில் முதல் இரு இடங்களைப் பெறும் அணியே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளமையால் குழு பி இல் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே அரையிறுதிக்கான போட்டி மிக அதிகமாக உள்ளது.
ஆகவே இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே முதல் இரு இடங்களுக்கு தகுதி பெறும் என்பதனால் இரு அணிகளும் வெற்றியை நோக்கி போராடும். எனவே இந்தப் போட்டி ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)