உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லங்களை இன்று அரசிடம் கையளிக்கும் மஹிந்த, சந்திரிகா

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தற்போது உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய அவர்களுக்கான அந்தச் சலுகையை அவர்கள் மூவரும் இழந்துள்ளனர்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற உள்ளனர்.

அவர் ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளதாக தெரியவருகிறது.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்றும் தெரியவருகிறது.

ஏதேனும் காரணத்தினால் சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், அவை தொடர்பில் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்திற்கு அமைய, எதிர்காலத்தில் செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது.

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2 வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மாத்திரமே ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேறியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *