அட்டாளைச்சேனை முஹம்மட் ஆதிக் கிழக்கு மாகாணத்தின் சிறந்த மெய்வல்லுநர் வீரராகத் தெரிவு
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடாத்திய மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவன் முஹம்மட் ஆதிக் தான் பங்குபற்றிய மூன்று போட்டிகளிலும் முதலிடத்தினை பெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக்கொண்டார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் கடந்த ஐந்து நாட்கள் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
இதில் அக்கரைப்பற்று கல்வி வலயம் சார்பாக கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவன் ஆர்.முஹம்மட் ஆதிக் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி 4.72 மீற்றர் தூரம் பாய்ந்து முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டார். அதனையடுத்து இடம்பெற்ற 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 60 மீற்றர் ஓட்டப்போட்டிகளிலும் அவர் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் தனியாக பங்குபற்றிய மூன்று போட்டி நிகழ்ச்சிகளிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்துக் கொண்டதுடன் கிழக்கு மாகாண சிறந்த மெய்வல்லுநர் வீரராகவும் தெரிவு செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4×50 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் அந்-நூர் மகா வித்தியாலயம் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது. இந்தப்போட்டியிலும் ஆதிக் பங்கேற்று தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தமை விசேட அம்சமாகும்.
அந்த வகையில் தனது அதீத திறமையின் மூலம் மொத்தமாக நான்கு தங்கப் பதக்கங்களை சுவீகரித்து தனது பாடசாலைக்கும் அக்கரைப்பற்று வலயத்துக்கும் பெருமை சேர்த்த மாணவன் முஹம்மட் ஆதிக்கை பாடசாலை சமூகம் பாராட்டுவதுடன் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய பாடசாலை அதிபர் ஏ.எம்.அஸ்மி மாணவனின் வெற்றிக்காக உழைத்த உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ஹாறூன், பயிற்றுவிப்பாளர் றிஸ்வான் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் நன்றியினை தெரிவித்துள்ளது.
இம்முறை இடம்பெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் அந்-நூர் மகா வித்தியாலயத்துக்கு 7 தங்கம் ஒரு வெள்ளியுமாக மொத்தமாக 8 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அந்தவகையில் பதக்க அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அந்-நூர் மகா வித்தியாலயம் முதலாமிடத்தினையும் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பதக்கங்களை பெற்றவர்கள் கடந்த திங்கட்கிழமை (8) அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரால் வாழ்த்தி வரவேற்கப்பட்டனர்.




(றியாஸ் ஆதம்)