இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டங்கள்
போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் இதன்போது சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.