மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்;கலாநிதிஎம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் மீலாத் தின வாழ்த்துச் செய்தி
எமது இறைத் தூதரான நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த நாளான மீலாதுன் நபி தினத்தில், உலகெங்கும் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும், குறிப்பாக இலங்கையிலுள்ள எம் அன்பு மக்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த வரலாறு, மனிதகுலத்திற்கு வழிகாட்டும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும். அவர் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அன்பு, நம்பிக்கை, சகிப்புத் தன்மை, நீதி மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய பண்புகளால் நிரம்பியிருந்தது. சமுதாயத்தில் வறியவர்களுக்கு அக்கறை காட்டுதல், அநீதியால் வாடுவோருக்காக குரல் கொடுப்பது, அன்பும் நட்பும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டியது தான் நபிகளாரின் மகத்தான வழிகாட்டுதலாகும்.
இன்றைய உலகம் பல்வேறு சவால்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்ளும் நேரத்தில், நபிகளாரின் நட்பண்புகளை மீண்டும் நினைவுகூர்ந்து செயல்படுதல் என்பது மிகுந்த அவசியமாகிறது. மதம், இன வேறுபாடுகளை தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், சமாதானம் ஆகியவற்றை நிலைநிறுத்த வேண்டும்.
இந்த புனித நாளில், உலகம் முழுவதும் அமைதியும் நிம்மதியும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். குறிப்பாக, பல துயரங்களையும் அநீதிகளையும் எதிர்கொண்டு வரும் பலஸ்தீன் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் வாழ்வில் நீதி, சுதந்திரம் மற்றும் அமைதி நிலவவேண்டும் என அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.