எல்ல வாகன விபத்தில் 15 பேர் பலி; 18 பேர் காயம்
எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களில் பதினைந்து பேர் (6 ஆண்கள் மற்றும் 9 பெண்கள்) இறந்ததாகவும், குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று (04) இரவு 9.00 மணியளில் வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து எல்ல பொலிஸ் பிரிவில் 23ஆவது மற்றும் 24ஆவது கிலோமீட்டர் தூணுக்கிடையில் எதிரே வந்த ஜீப் மற்றும் வீதியின் இரும்பு வேலியில் மோதி குறித்த பேருந்து 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஆறு ஆண்கள், ஐந்து பெண்கள், மூன்று சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் பயணிகளை மீட்க உதவிய இரண்டு நபர்களும் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தியத்தலாவ, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.