அல் குர்ஆனின் போதனைகளையும் நபிகள் நாயகத்தின் வழிமுறைகளையும் பின்பற்றுவதிலேயே முஸ்லிம்களின் விமோசனம் உள்ளது; மீலாத் தின செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
முஸ்லிம் சமுதாயம் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு, விமோசனம் அடைவதற்கான தீர்வு அல்குர்ஆனின் போதனைகளிலும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலுமே காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மீலாத் தின செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
முஸ்லிம் சமுதாயம் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் சொல்லொணா வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் முகம் கொடுத்த வண்ணமே முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
நவீன உலகை ஆட்கொண்டிருக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளின் தாக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும், சிறுபான்மையினராகவும் வாழும் நாடுகளைப் பொறுத்தவரையில் மிகவும் பாரதூரமானவை.
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது( ஸல்) அவர்கள் தமது 63 ஆண்டுகால உலக வாழ்வில், நபித்துவம் அருளப்பட்டதிலிருந்து 23 வருடங்கள் இஸ்லாமியத் தூதை மக்காவிலும் மதீனாவிலும் நிலைநாட்டிய காலகட்டத்தில் அடையப் பெற்ற அனுபவங்களை உரிய படிப்பினையாகக் கொண்டு, அன்னாரின் வாழ்வின் விழுமியங்களை பின்பற்றியொழுகி,இம்மை,மறுமை இரண்டிலும் சிறப்பான ஈடேற்றம் பெற அன்னாரின் மீலாத் தினத்தில் நாம் திடசங்கற்பம் பூணுவோமாக.
முஸ்லிம்களின் எழுச்சியைச் சகித்துக்
கொள்ள முடியாத தீய சக்திகள் இஸ்லாத்தின் மீதான பீதி மனப்பான்மையை திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்துவிட்டு ள்ளன.யுத்த சூழ்நிலையில் பலஸ்தீனம் முதலான பல நாடுகளில் பொது மக்களின் ஜனநாயக உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்டு, இனப்படுகொலைகளும் அடாவடித்தனங்களும் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், நபி பெருமானாரின் வாழ்வில் இருந்து நாம் உயரிய படிப்பினைகளை பெற வேண்டியது இன்றியமையாதது.
அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.