புலமைப் பரிசில் பரீட்சையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் சித்தியடைந்து வரலாறு படைத்தனர்; அதிபர் யு.எம்.எம். அமீர் பெருமிதம்
வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாறு படைத்திருப்பதாக பாடசாலையின் அதிபர் யு. எம்.எம். அமீர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு அமைய இன்றைய தினம் (04) பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தன. இப் பரீட்சையில் இலங்கை முழுவதும் 303670 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதில் வெளியிடப்பட்ட மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகளைக் கடந்து 51969 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய புத்தள மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியாக 131 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்க கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையினை பிரதிநிதித்துவம் செய்து பரீட்சைக்கு முகம் கொடுத்த மாணவர்களில் 17 மாணவர்கள் வெட்டுப்புள்ளியினைக் கடந்து சித்தியடைந்து வரலாறு படைத்தனர்.
இது குறித்து கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் யு.எம்.எம். அமீர் கருத்து வெளியிடுகையில், “இன்று வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 17 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். மேலும் கல்வி அமைச்சின் அடைவு மட்டமாக கனிக்கப்படுகின்ற 70 புள்ளிகளுக்கும் மேல் பெற்ற மாணவர்களை பார்க்கையில் 74 % ஆகும். அல்ஹம்துலில்லாஹ் .
எனவே இவ் வரலாாற்றுச் சாதனை புரிந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த அன்பான மாணவர்களைப் பாராட்டுவதோடு அதற்காக இரவு பகலாக உழைத்த திருமதி எம்.ஏ. ரஷீயா நஸீம் , திருமதி பி. பாஹிமா, திருமதி எம்.பி. முஹ்ஸினா பர்வின் ஆகிய வகுப்பாசிரியர்களுக்கும் அதே போன்று இதற்காக பங்களிப்புச் செய்த ஏனைய ஆசிரியர்களுக்கும் வெளி வளவாளர்களாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் இவ் வரலாற்றுச் சாதனையின் பின்னால் விடா முயற்சியுடன் செயற்பட்ட பிரதி அதிபர்களான திருமதி எஸ்.எப். சாஜினாஸ் மற்றும் திரு. எம்.என்.எம். நஸ்ரின் ஆகியோருக்கும், ஆரம்பப் பிரிவின் பகுதித் தலைவர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்களுக்கும் ( SDEC ) , பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்களுக்கும் ( PPA ) இவை அனைத்திற்கும் மேலாக பல்வேறு சவால்களைத் தாண்டி இச்சாதனையை பெற்றுக் கொடுத்த பாடசாலை சமூகம் சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.” என்றார்.



















(அரபாத் பஹர்தீன்)