உள்நாடு

புதிய மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் எமது பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்..! -வடக்கு மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை கொண்டுவந்து அந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடியை முன்னால் வைத்த அந்த மக்களை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதாக தெரிவித்த ஜனாதிபதி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார். 

வடக்கு மக்களின் காணி உரிமைகள், மொழி மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார். நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், தேவையான முடிவுகள் தயக்கமின்றி எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு நகரில் இன்று (02) காலை நடைபெற்ற “நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

பருத்தித்துறை – சிலாவத்துறை – கொக்கிலாய் ஆகிய மூன்று நகரங்களை இணைத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின் பேரில் வடக்கு தெங்கு முக்கோணம் நிறுவப்படுகிறது. இதன் கீழ், 2025 ஆம் ஆண்டுக்குள் புதிதாக 16,000 ஏக்கர் தென்னங் காணிகளில் தெங்கு பயிரிடுவதற்காக வடக்கு பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளுக்கு அதிக அறுவடை தரும் தென்னங் கன்றுகளை வழங்கவும், அந்த காணிகளை மேம்படுத்தவும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டது. 

2025 முதல் 2027 வரையிலான மூன்று ஆண்டுகளுக்குள் காணிகளின் அளவை 40,000 ஏக்கராக அதிகரிப்பதன் மூலம், வட மாகாணத்தில் தென்னை கைத்தொழில்களை நிறுவுவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தெங்கு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வருடாந்தம் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னை விவசாயிகளுக்கு அரசாங்க மானியங்களுக்கான உரிமைப் பத்திரங்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார். 

2025 உலக தெங்கு தின நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது. சர்வதேச தெங்கு சமூகத்தின் பாராட்டுச் சான்றிதழ் இலங்கைக்கு வழங்கப்படுவதைக் குறிக்கும் சான்றிதழை சர்வதேச தெங்கு சமூகத்தின் பிரதிப் பணிப்பாளர் நுவன் சிந்தக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கினார். 

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது, 

இந்த புதுக்குடியிருப்பு பகுதி கடந்த காலங்களில் பாரிய யுத்தத்தை சந்தித்த ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். அந்த மோதல்கள் காரணமாக, இந்தப் பகுதி மக்கள் அனைத்தையும் இழந்தனர். கடந்த தேர்தலின் போது இந்தப் பகுதி மக்களை நான் சந்தித்தேன். இந்த அழிவுற்ற பகுதிக்கும், மக்களுக்கும் நாம் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். குறிப்பாக கடந்த தேர்தல்களின் போது, இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வலுவான அடியை எடுத்து வைத்தனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடி எடுத்து வைத்த மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும். 

அதற்காக, நாங்கள் பல துறைகளில் பணிகளைத் தொடங்கினோம். முதலில், இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள், அத்துடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆகியவற்றை அவர்களின் அடிப்படை உரிமைகளாக நாங்கள் பார்க்கிறோம். அந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். 

இரண்டாவதாக, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஒரு அரசாங்கமாக, அவர்கள் இழந்த பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 

வடக்கை மையமாகக் கொண்டு புதிய கைத்தொழில் வலயங்களை நிறுவுதல், புதிய எழுச்சியை ஏற்படுத்தக்கூடிய சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், பயிர்ச் செய்கைக்கு அவசியமான நீர் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதோடு, அதன் முக்கிய அங்கமாக இந்த தெங்குப் பயிர்ச் செய்கைத் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் கீழ், இந்த ஆண்டு 16,000 ஏக்கர் தென்னை பயிரிட அமைச்சு திட்டமிட்டுள்ளது. சுமார், 12,000 விவசாயக் குடும்பங்களை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தத் திட்டம் அந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

மேலும், அடுத்த படியாக, கலாசார ரீதியாக நாம் உருவாக்க வேண்டியது நம்மிடையேயான ஒருங்கிணைப்பை ஆகும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடக்கூடிய ஒரு நாளைப் பெயரிட்டுள்ளோம். விளையாட்டின் மூலம் உறவுகளை உருவாக்க முயற்சி செய்கிறோம். பிளவுபட்ட மக்களை மீண்டும் இணைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இங்குள்ள மக்களின் வாழ்வில் பெரும் பகுதி போரிலே கழிந்துவிட்டது. 

ஒருவரையொருவர் நம்பாமல், சந்தேகப்பட்டு ஆயுதம் ஏந்தி முப்பது வருடங்கள் போராடினார்கள். அது நம் நாட்டில் நடந்த ஒரு பாரிய துயரம் ஆகும். இது நம் நாட்டு மக்களை அந்நியப்படுத்தியது. இனவெறி அரசியல் தோன்ற வழிவகுத்தது. 

வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர். மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். அதேபோன்று, மக்களாகிய நீங்களும், இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும் என்றும் நான் நம்புகிறேன். ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள். அதற்காக எடுக்கக் கூடிய, சர்ச்சைக்கு உள்ளாகும் முடிவுகளை எடுப்பதற்கும் நாங்கள் சிறிதும் அஞ்சமாட்டோம். மேலும், நாம் எடுத்து வரும் முற்போக்கான நடவடிக்கைகளை பழைய, அழிவுகரமான, இனவாதப் பேச்சுக்களால் மாற்ற இடமளிக்க மாட்டோம். 

இந்தப் பகுதி மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகளை வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கடந்த ஒரு வருடமாக இதற்குத் தேவையான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம். இன்று, அரசியல் அதிகாரத்திலிருந்து மோசடி மற்றும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. 

அரச சேவையை வலுப்படுத்தவும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். திறைசேரிக்கு கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய வலுவான பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும், தடைபட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களையும் பல புதிய திட்டங்களையும், மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 

அனைத்துத் துறைகளிலும் புதிய அபிவிருத்தியை தொடங்கியுள்ளோம். அதன்படி, இந்த நாட்டை ஒரு புதிய தேசமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளோம். இந்த அடித்தளத்தின் அடிப்படையில், இந்த நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். இலங்கையை உலகின் பாராட்டையும் மரியாதையையும் வென்ற நாடாக மாற்றுகிறோம். 

அந்தப் பயணத்தில் உங்கள் அனைவரின் ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டை எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பயணத்தில் எங்களுடன் இணையுமாறு உங்களை அழைக்கிறேன்’ என தெரிவித்தார். 

மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தெங்கு அபிவிருத்தி அதிகார சபை, தெங்கு பயிர்ச்செய்கை சபை, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *