விளையாட்டு

அல் மின்ஹாஜின் கிரிக்கெட் பியஸ்டா- 2025; சம்பியனானது ஆர்.ஆர் நைட் ரைடர்ஸ்

மதுரங்குளி பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் பியஸ்டா 2025 இன் சம்பியன் மகுடத்தை ஆர்.ஆர் நைட் ரைடர்ஸ் அணி தனதாக்கிக் கொண்டது.

74 வருட வரலாற்றினைக் கொண்ட மதுரங்குளி பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த முதலாவது பழைய மாணவர்களுக்கு இடையிலான அணிக்கு பதினொரு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 29,30 மற்றும் 31 ஆம் திகதிகளில் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.

இதில் ஆர்.ஆர். நைட் ரைடர்ஸ், எம்.ஆர்.எப். டஸ்கஸ், டெலன் சீ.சீ, கொழும்பு ட்ரேடர்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெருக்குவட்டான், பெருக்குவட்டான் சுப்பர் கிங் மற்றும் எம்.கே.எம் ட்ரகன்ஸ் ஆகிய 7 பழைய மாணவர்களை உள்ளடக்கிய அணிகள் பங்கேற்றன.

இதற்கான 7 அணிகளையும் 7 உறுமையாளர்கள் பெற்றிருந்ததுடன் வீரர்களும் ஏலம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர். அதனடிப்படையில் ஒரு அணி மற்றைய 6 அணிகளுடன் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் மோதியிருந்தது. பின்னர் குழு நிலையில் முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகளான ஆர். ஆர். நைட் ரைடர்ஸ் அணியும் எம்.ஆர்.எப். டஸ்கஸ் அணியும் முதல் குவளிபயர் போட்டியில் மோதின. அதில் எம். ஆர். எப் டஸ்கஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

பின்னர் இடம்பெற்ற முதல் எலிமினேட்டர் போட்டியில் 3ஆம் , 4ஆம் இடம் பெற்ற கொழும்பு ட்ரேடர்ஸ் மற்றும் பெருக்குவட்டான் சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் கொழும்பு ட்ரேடர்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது. பின்னர் இடம்பெற்ற 2ஆவது குவளிபயர் போட்டியில் முதல் குவளிபயர் போட்டியில் தோற்ற ஆர்.ஆர். நைட் ரைடர்ஸ் அணியை கொழும்பு ட்ரேடர்ஸ் அணி எதிர் கொண்டது. இப்போட்டியில் போராடி வென்ற ஆர்.ஆர். நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் இறுதிப் போட்டியில் எம்.ஆர்.எப் டஸ்கஸ் அணியை எதிர்த்தாட தகுதி பெற்றது.

இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் எம்.ஆர்.எப். டஸ்கஸ் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வீழ்த்திய ஆர்.ஆர். நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தியது.

சம்பியனான ஆர்.ஆர். நைட் ரைடர்ஸ் அணி

2ஆம் இடம் பெற்ற எம்.ஆர். எப். டஸ்கஸ் அணி

3ஆவது இடம் பெற்ற கொழும்பு ட்ரேடர்ஸ் அணி

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *