ஆயுதங்களை கையளிக்க ஹிஸ்புல்லாஹ் அமைப்பு மறுப்பு; இஸ்ரேல் உடனடியாக காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தல்
ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தனது ஆயுதங்களை ஒருபோதும் கைவிடாது என கடுந் தொனியில் அறிவித்துள்ளது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆயுதக் கழைவு தொடர்பான கோரிக்கைகளை அவ்வமைப்பு உறுதியாக நிராகரித்துள்ளதோடு, இஸ்ரேல் உடனடியாக காஸாவில் நடத்திவரும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் பொதுச் செயலாளர் நயீம் காசிம், லெபனானின் பாதுகாப்பிற்கு ஹிஸ்புல்லாஹ்வின் ஆயுதங்கள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார், இஸ்ரேலின் நடவடிக்கைகளை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரும் வரை அதன் ஆக்கிரமிப்பு எதிர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
காசிம் தனது அறிக்கையில், லெபனான் அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்கிறது என்பதை உறுதி செய்வதில் தீவிர பங்கு வகிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஹிஸ்புல்லாஹ் அமைப்பு அதன் கொள்கைகளில் சமரசம் செய்யாது, ஏனெனில் அதன் போராளிகள் இஸ்ரேலின் நோக்கங்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறார்கள். மேலும், ஒவ்வொரு கோரிக்கையும் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை எதிர்ப்பு தொடரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர, இஸ்ரேலை லெபனான் பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறும், கைதிகளை விடுவிக்குமாறும், அனைத்து வகையான இராணுவத் தாக்குதல்களையும் நிறுத்துமாறும் காசிம் கோரிக்கை விடுத்தார். நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு இந்த நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார், எந்த தாமதமும் துயரத்தை நீடிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இஸ்ரேல் அதன் தந்திரோபாய நோக்கங்களை அடைவதைத் தடுப்பதே ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அதேவேளை, ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் வலிமை இஸ்ரேல் லெபனானுக்குள் மேலும் முன்னேறுவதைத் தடுக்ககும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு இஸ்ரேலின் ஊடுருவலை கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக உள்ளது எனவும், ஆக்கிரமிப்பு அல்லது குறுக்கீடு சகித்துத்துக்கொள்ளப்படாது என்ற தெளிவான செய்தியை ஹிஸ்புல்லாஹ் அமைப்பு அனுப்பியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே, நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு அதன் பங்கை இன்றியமையாததாகக் கருதுகிறது.
இதற்கிடையில், லெபனான் தலைவர்களைச் சந்தித்த பிறகு, அமெரிக்க தூதுவர் டாம் பராக், லெபனான் முந்தைய ஆயுதக் கழைவு முயற்சிகளில் ஏற்கனவே ஒத்துழைப்பைக் காட்டியதாகக் கருத்து தெரிவித்தார். இப்போது இஸ்ரேலும் பொறுப்புடன் செயல்பட்டு அதன் வன்முறை செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்;. மோதல் நிலையினைத் தவிர்த்து அமைதிக்கானதும் உண்மையானதுமான வாய்ப்பை உருவாக்குவதற்கு பரஸ்பர கட்டுப்பாடு தேவை எனவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
(எம்.ஐ.அப்துல் நஸார்)