Saturday, August 30, 2025
Latest:
உள்நாடு

நாட்டுக்காக நாம் ஒன்றிணைவோமே தவிர அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல் , நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களை காண்பதற்கே எதிர்க்கட்சியின் பரந்தபட்ட கூட்டணி கட்டியெழுப்பப்படும். தற்போதைய அரசாங்கத்தால் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில்களையும் தீர்வுகளையும் பெற்றுத் தர முடியாதுபோயுள்ளது. 40,000 பட்டதாரிகள் தொழிலின்றி வீதியில் நிற்கின்றனர். நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உட்பட காய்கறிகள் மற்றும் பழச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் கூட உதவியற்ற நிலையில் காணப்படுகின்றனர். தற்போது நாட்டின் 50% மக்கள் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். 71% ஆன மக்கள் அஸ்வெசும நிவாரணம் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கூட போதிய வசதிகள் இல்லை. தர்மாச்சாரியப் பரீட்சையில் சித்தி பெற்ற 14,000 பேருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் பதில்களையும் இந்த அரசாங்கத்தால் பெற்றுக் கொடுக்க முடியாதுபோயுள்ளது. பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் பராட்டே சட்டம் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சகலரையும் ஒன்றிணைத்துக் கொண்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைத் தேட வேண்டும். இவை வெறுமனே குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டவை அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 27ஆம் திகதி சந்தித்து நலம் விசாரித்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (HDP) பணியாளர் குழும பிரதிநிதிகளை (U.S. House Democracy Partnership-HDP) இன்று சந்தித்தேன். இச்சந்திப்பில் நாட்டிற்காக வேண்டி கோரிக்கையொன்றை முன்வைத்தேன். நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த 44% தீர்வை வரியை பின்னர் 30% ஆகவும், அதனைத் தொடர்ந்து 20% ஆகவும் குறைத்தது. முடியுமானால், இந்த தீர்வை வரியை மேலும் குறைக்குமாறும், முடிந்தால் குறித்த தீர்வை வரியை நீக்குமாறும் கோரினேன். ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பணிக்குழாத்திடம் அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *