தேசிய மீலாத் விழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது; முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ்
இவ்வருட தேசிய மீலாத் விழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தெரிவித்தார்.
இவ்வருட தேசிய மீலாத் விழா ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அம்பலாந்துவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள போலான அரூசியா ஜூம்ஆப் பள்ளிவாசல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பான ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர் ஒரு தேசிய மீலாத் விழா ஏற்பாடுகள் தொடர்பாக கேட்ட கேள்விக்கே பணிப்பாளர் மேற்பண்டவாறு தெரிவித்தார். மேற்படி ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இடம் பெற்றது.
பணிப்பாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இவ்வருட தேசிய மீலாத் விழா கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் பல முக்கியஸ்தர்கள் மீழாத் விழா நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். அதேபோல் சுமார் 1500 க்கும் மேற்பட்டடோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேற்படி விழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் புத்தசாசன அமைச்சு, ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலகம், அதேபோல் எமது திணைக்களம் மற்றும் அமைப்புக்கள் ஒன்றினைந்து செய்து வருகின்றோம்.
இந்த விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. அந்த வகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தி நிதியில் இருந்து சுமார் 10 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாகவும் அதனை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தேவையுடைய தெரிவு செய்யப்பட்ட 18 பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேசிய மீலாத் விழா நடைபெறும் பள்ளிவாசலுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபாவும் ஏனைய பள்ளிவாசல்களுக்கு மிகுதி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது என்றார்.
தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள், அரபி கல்லூரி மாணவர்களுக்கிடையில் போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு அதில் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற இருப்பதாகவும் சுமார் 400 மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட இருப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)