மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மஜ்லிஸ்-உல்-இஸ்லாத்தின் 43வது வருடாந்த பொதுக்கூட்டம், மற்றும் இஸ்லாமிய தினம்..!
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மஜ்லிஸ்-உல்-இஸ்லாத்தின் 43வது வருடாந்த பொதுக்கூட்டம், மற்றும் இஸ்லாமிய தினமானது ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24 அன்று மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ரூபர்ட் பீரிஸ் அரங்கத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இக் கூட்டமானது மஜ்லிஸ் உல் இஸ்லாத்தின் தலைவர் எம் என் அப்ஸல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஜாமியா நளீமியா அரபிக் கல்லூரியின் முதல்வர் அஷ்-ஷெய்க் ஏ சி அகார் முகமது தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியாமல் போயிருப்பினும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொது செயலாளர் அஷ் ஷெய்க் எம் அர்கம் நூராமித் நிகழ்வில் உரையாற்றி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டமானது நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கில் இனிதே நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய அம்சங்களாக, கழகத்தின் உப செயலாளர் எம் எப் எம் உஸ்மான் அவர்களால் கடந்த வருட பொதுக்கூட்ட அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தின் உப தலைவர் ஏ.ஆர்.ஏ நுஸ்ரி அவர்களால் வருடாந்த கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. புதிய நிர்வாக குழு தலைவராக எம் ஆர் எம் ரப்ஸான், மற்றும் செயலாளராக எம் ஏ எம் அதுஹம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மேலும், கடந்த வருடம் மஜ்லிஸ் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களுக்கான பாராட்டுக் கடிதங்களும், புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் பொறியியல் பீட மாணவர்களின் கலாச்சார நாடகம் அரங்கேற்றப்பட்டது. அவ்விடத்திலேயே லுஹர் தொழுகையும் நடத்தப்பட்டு மதிய போஷனமும் வழங்கப்பட்டது.
இவ்வருட பொதுக் கூட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாக பஜ்ர் கவுன்சில் அமைப்பினரால் நடாத்தப்பட்ட மாலை நேர விஷேட அமர்வு குறிப்பிடத்தக்கது. அமைப்பின் நிறுவுனர் நபீல் ஹம்ஸா அவர்களால் ‘Facts in a Nutshell’ என்ற தலைப்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விளக்கக் காட்சிகளுடனான விழிப்பூட்டும் உரை வழங்கப்பட்டு, வினா விடைப் போட்டிகளும், அதன் வெற்றியாளர்களுக்கான பணப் பரிசில்களும் வழங்கப்பட்டமையானது பங்கேற்பாளர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தின. அத்துடன் இந்த வருடாந்த பொதுக்கூட்டம் ஸலவாத் உடன் இனிதே நிறைவடைந்தது.
இந் நிகழ்வில் அனைவரையும் கவர்ந்த விடயமாக, கட்டிடக் கலை பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட “பலஸ்தீனின் விடுதலை” என்ற கருத்தினாலான விழா அலங்காரங்கள் அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது
































