“அரசியல் நோக்கம் எதுவுன்றி முற்றிலும் சமூகத்தின் நன்மை கருதியே எமது எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் இருக்கும்..!” -SLOGAN பணிப்பாளர் பொறியியலாளர் கலாநிதி சாதிக்
அரசியல் நோக்கம் எதுவுமின்றி முற்றிலும் சமூகத்தின் நன்மைக்காகவே தேசத்திற்கான நடவடிக்கை: வெளிநாட்டு இலங்கையர் குழுமத்தின் (SLOGAN) எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் இருக்கும் என குழுமத்தின் பணிப்பாளரும் பொறியியலாளருமான கலாநிதி ஏ.எம்.ஐ. சாதிக் தெரிவித்தார்.
தேசத்திற்கான நடவடிக்கை: வெளிநாட்டு இலங்கையர் குழுமத்தினை (SLOGAN) சாய்ந்தமருதில் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது சீ ப்ரீஸில் இடம்பெற்றது.
இக்குழுமத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் இந்நிகழ்வில் பணிப்பாளர் பொறியியலாளர் கலாநிதி ஏ.எம்.ஐ. சாதிக் இவ்வமைப்பை அறிமுகப்படுத்தி, கருத்து தெரிவித்த போது,
SLOGAN எனப்படும் “வெளிநாட்டு இலங்கையர்கள்” குழு தேசத்திற்கான நடவடிக்கை என்பது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை நிபுணர்களின் ஒரு பாரபட்சமற்ற சிவில் சமூக வலையமைப்பாகும். அவர்கள் அமைதியான, வளமான, சமத்துவமான மற்றும் நீதியான இலங்கையை விரும்புகின்றனர். அத்துடன் வரலாற்றில் இந்த முக்கியமான கட்டத்தில் அதற்காக பங்களிக்கவும் விரும்புகின்றனர். அந்த அடிப்படையில் SLOGAN நாட்டில் அதன் பல சமூக-பொருளாதார திட்டங்களைச் செயற்படுத்தும் போது ஒரு சிந்தனைக் குழுவாகவும் தன்னார்வ நிபுணத்துவக் குழுவாகவும் செயற்படுவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது என்றும் தெரிவித்த அவர், SLOGAN இன் நிறுவன அமைப்பு ஒன்பது துணைக்குழுக்களைக் கொண்டுள்ளது, அவை குறிப்பிட்ட பாடப் பகுதிகளைக் கையாளுகின்றன. ஒரு தலைவர் தலைமையிலும், தலைவர்கள் குழு மற்றும் மூத்த உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு இவையனைத்தும் ஒருங்கிணைப்பாளரால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு துணைக்குழுவும் எட்டு உறுப்பினர்கள் வரை கொண்டுள்ளது.
SLOGAN குழுமமானது கடந்த 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பானது புலம்பெயர்ந்து வாழக்கூடிய கல்வியியலாளர்களைக் கொண்டு எமது பிராந்தியத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டினர், அதாவது இங்கிலாந்து, ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளில் வாழுகின்ற உயர்மட்ட இலங்கையர் நிபுணர்களைக் கொண்ட சிவில் சமூக அமைப்பாகவும் இந்த SLOGAN அமைப்பு காணப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியலாளர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள் என்று ஏராளமான கல்வி சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் இந்த அமைப்பிலே பிரதிநிதிகளாக இருக்கின்றனர். அமைதியானதும், செழிப்பானதும், நீதியானதும், சமத்துவமானதுமான இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவதற்கு அதற்கான நிபுணத்துவ பங்களிப்பை கொண்ட அடிப்படையிலே நாங்கள் இந்த அமைப்பின் ஊடாக நல்லதொரு தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்ற நன் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
SLOGAN அமைப்பினுடைய நோக்கங்கள் மற்றும் இதனுடைய செயற்பாடுகளை விளக்கும் முகமாகவே இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பிறந்து ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமல்ல, மத்திய கிழக்கு நாடுகளிலே வாழ்கின்ற போதும் தாய் தேசத்தின் மீது அதேபோல இங்கே வாழக்கூடிய மக்கள் மீதும் நம் சமூகத்தின் மீதும் கரிசனை கொண்டு இயங்குவதற்காகவே இந்த SLOGAN அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் மக்கள் நல செயற்பாடுகளிலும் அவதானம் செலுத்தி, தேவையான பங்களிப்பை நல்கி, தேசத்தை மென்மேலும் வளம் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கிலே புத்திஜீவிகள், துறை சார்ந்த நிபுணர்கள், அரசியல் சார்பற்ற, அழுத்த குழுவாகவே இந்த SLOGAN அமைப்பிலே பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாமல் முற்றிலும் சமூகத்தின் நன்மைக்காகவே SLOGAN அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது, நெட்வேர்க்கில் சுமார் எண்பது உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் உயர் தகுதி வாய்ந்த நிபுணர்கள் (மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், கல்வியியலாளர்கள், விஞ்ஞானிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சமூகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவை). உறுப்பினர்கள் அனைவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினர், அவர்கள் இங்கிலாந்து, ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்றனர். உறுப்பினர்களில் ஐந்து சதவீதம் இலங்கையைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அவர்கள் விதிவிலக்கான சமூக அந்தஸ்தைக் கொண்டவர்கள் என்பதோடு, இந்தக் குழுமமானது கொள்கை மற்றும் அரசியலமைப்பு விவகார துணைக்குழு, சட்டம் மற்றும் மனித உரிமைகள் விவகார துணைக்குழு, திறன் மேம்பாடு, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஊடக துணைக்குழு, கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் துணைக்குழு, பாலின விவகாரங்கள் மற்றும் சமத்துவ துணைக்குழு, சுகாதாரம் மற்றும் சமூக நல துணைக்குழு, சமூக ஆராய்ச்சி மற்றும் அறிவு பரிமாற்ற துணைக்குழு, வெளியீடுகள் மற்றும் பிரசார துணைக்குழு, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை துணைக்குழு போன்ற துணைக்குழுக்களை கொண்டு நிறுவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலதிக விபரங்களை www.slogan.global என்ற இந்த வெப்தளத்திற்குச் செல்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
SLOGAN குழுமத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் சமூக செயற்பாட்டாளர் டாக்டர் சாதிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், SLOGAN அமைப்பின் கிழக்குப் பிராந்திய ஒருங்கிணைப்பாளர், பொறியியலாளர் தொழிலதிபர் ஹலீம் எஸ். முகம்மட், அமைப்பின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி முகம்மது சமீம் அபூசாலி, கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் தலைவர் முபாரக் சீனி முஹம்மத், மற்றும் கலீலுர் ரஹ்மான், டாக்டர் சனா, சபீக், நவாஸ்டீன் ஜவாஹிர் உட்பட பிரதேச ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


