நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கு பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் நாட்டில் முழுமையான அபிவிருத்தியை அடைய முடியும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஐ.நா. ஜனத்தொகை நிதியத்தினால் (UNFPA) ஏற்பாடு செய்யப்பட்ட, ‘பாலின சமத்துவத்தின் மூலம் கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துதல்: அறிவின் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல்’ என்ற தலைப்பிலான கொள்கை மற்றும் ஆராய்ச்சி மாநாட்டில் ஒகஸ்ட் 27 (நேற்று) கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, இலங்கையில் நிலவும் பாலின சமத்துவமின்மை மற்றும் உருவாகும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு தேவையான முக்கியமான சான்றுகள் மற்றும் கொள்கை பரிந்துரைகளை வழங்கும் நான்கு விசேட அறிக்கைகள் பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த அறிக்கைகள், மிகவும் நீதியான மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பங்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை அடைவதன் மூலம், ஒட்டுமொத்த நாடும் முன்னேற முடியும்.
பெண்கள் மீது அசாதாரணமாகச் சுமத்தப்படும் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகள் குறித்து நாம் விசேடமாகக் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி, அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பது தேசிய முன்னேற்றத்திற்கு அவசியம் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் ஜனத்தொகை நிதியத்தின் (UNFPA) பிரதிநிதி குன்லே அதெனியி, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நலின் அபேசிங்க, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

