பற்சிதைவைத் தடுப்பதற்கு புளூரைட் பற்பசையே சிறந்த வழி..! பல்வைத்திய ஆலோசகர் ஷானிகா முதுதந்திரி..!
சந்தையில் கிடைக்கும் பற்களை வெண்மையாக்கும் பற்பசைகள், பற்களை உண்மையாக வெண்மையாக்குவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக பல் வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஷானிகா முத்தந்திரி இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த பற்பசைகள் பாதிப்பில்லாதவை என்றாலும், அவற்றில் சிலிக்கா அல்லது கல்சியம் கார்பனேட் போன்ற கடினமான கூறுகள் உள்ளன. இவை பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை மட்டுமே சுத்தம் செய்யக்கூடியவை, ஆனால் பற்சிப்பியை (enamel) சேதப்படுத்தக்கூடியவை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பற்பசைகள் ஏற்படுத்தும் வெண்மையாக்கும் விளைவு நீண்ட காலம் நீடிக்காது என்றும், அதற்கு பதிலாக, பற்களைப் பாதுகாக்க உதவும் புளூரைட் (fluoride) பற்பசையைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது பாலர் பாடசாலை செல்லும் குழந்தைகளில் 63 சதவீதத்தினருக்கும், 35 முதல் 44 வயது வரையிலான பெரியவர்களில் 90 சதவீதத்தினருக்கும் பற்சிதைவு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பற்சிதைவைத் தடுப்பதற்கு புளூரைட் பற்பசையே சிறந்த வழி என அவர் வலியுறுத்தினார்.
இது பற்சிப்பியை வலுப்படுத்துவதாகவும், ஆரம்பகால சேதங்களைச் சரிசெய்வதாகவும், வாயில் உள்ள அமிலத்தன்மையைக் குறைப்பதாகவும் அவர் கூறினார்.
பெரியவர்களும், பெரிய குழந்தைகளும் 1,000 – 1,500 ppm புளூரைட் (Parts Per Million fluoride) கொண்ட பற்பசையைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களைத் துலக்க வேண்டும் எனவும், இது பாதுகாப்பானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் பற்களைத் துலக்கும்போது அதிக அழுத்தம் கொடுக்காமல், மென்மையான பற்தூரிகைகளை பயன்படுத்த வேண்டும் எனவும், பற்பசைப் பெட்டியில் புளூரைட் அளவைச் சரிபார்க்குமாறும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.