உள்நாடு

அமெரிக்க பிரதிநிதிகள் , சஜித் பிரேமதாச கலந்துரையாடல்.

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (HDP) பணியாளர் குழும பிரதிநிதிகளுக்கும் (U.S. House Democracy Partnership-HDP) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங் அவர்களும் பங்கேற்றார். பொருளாதாரம் தொடர்பான பல முக்கிய விடயங்களை எடுத்துரைத்து இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 24% ஆனவை அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும், நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் 63% ஆனவையும் அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செயப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த ஏற்றுமதிகள் நேரடியாக சுமார் 400,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இதனூடாக மறைமுகமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். இலங்கையின் விநியோகச் சங்கிலி மற்றும் தொழிற்துறை அமெரிக்கச் சந்தையை அணுகுவதைக் கொண்டு பெரிதும் சார்ந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அண்மைய வரி குறைப்பு காரணமாக விகிதங்கள் குறைத்திருந்தாலும், (உம்; 44% இலிருந்து 30% ஆகவும், 30% இலிருந்து 20% ஆகவும்) இலங்கை அதன் தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து மீள வேண்டுமானால் இந்த வரிச் சலுகைகள் முக்கியமானவை என்று வர்த்தக தீர்வை வரி தொடர்பில் அவதானம் செலுத்தி எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்தை தெரிவித்தார்.

அவ்வாறே, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு குறித்து கவனம் செலுத்திய சஜித் பிரேமதாச அரசியல், வணிகம், கல்வி மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் மூலம் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஜனநாயகம், சிந்திக்கும் சுதந்திரம், நட்புறவு பாராட்டும் சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றில் இரு நாடுகளும் பொதுவான உறுதிப்பாட்டால் பிணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இச்சந்திப்பில், அமெரிக்க தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திரு. டெரெக் லுய்டன்(Executive Director, House Democracy Partnership), திரு. சேஸ் பபயார் (Majority Staff Lead, HDP), திரு. கோல்பி ஹெரிமன் (Minority Staff Lead, HDP), திரு. எரிக் அஷிடா (Professional Staff Member, U.S. House Foreign Affairs Committee (Minority), இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல்/பொருளாதார ஆலோசகர் திரு. அந்தோணி வி. பிர்னோட், ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகார அதிகாரிகளான ஆடம் மிச்செலோ மற்றும் நஸ்ரின் மரிக்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சித் திட்டங்கள் உட்பட, இலங்கை பாராளுமன்றத்துடன் எதிர்கால ஒத்துழைப்பை அடையாளம் காணல் மற்றும் இலங்கையில் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கோண்டு வரும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கக்கூடிய பரப்புகளை ஆராய்வதே அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஜனநாயக கூட்டாண்மை (HDP) பணிக்குழாமின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்து காணப்படுகின்றன. மேலும், அமெரிக்கா மற்றும் இலங்கை இடையேயான வர்த்தகம், முதலீடு, பாராளுமன்ற பயிற்சி, திறன் விருத்தி மற்றும் பரந்த சமூக மற்றும் அரசியல் அபிவிருத்தி போன்ற துறைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *