உள்நாடு

ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்; ரணிலைச் சந்தித்ததன் பின் சஜித் பிரேமதாச அறைகூவல்

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எடுக்கும் சகல முயற்சிகளையும் முறியடிக்க மக்களுடன் ஒன்றிணைந்து வலுவான தலைமைத்துவத்தையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) சந்தித்து நலம் விசாரித்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குடிமக்களாக நமக்கு ஜனநாயக உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியலில் ஈடுபடும் சுதந்திரம் என்பன காணப்படுகின்றன. இந்த அச்சுறுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து உறுதியாக நின்று, நாட்டிற்காக நல்லதொரு நோக்கத்திற்காக அனைவரும் அணிதிரளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த நோக்கத்திற்காக பெற்றுத் தர முடியுமான உட்சபட்ச பாதுகாப்பையும் பக்க பலத்தையும் நாம் பெற்றுத் தருவோம். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க எதிர்க்கட்சி பூரண ஆதரவைப் பெற்றுத் தரும்.

அவ்வாறே, அடக்குமுறை, அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் நாம் அணிதிரள்வோம். இதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவோம். சட்டத்தை மதித்து, நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை பாதுகாத்து, நீதிமன்ற சுதந்திரத்திற்காக வேண்டி நாம் முன்நிற்போம். அடக்குமுறை அச்சுறுத்தல்கள் மூலம் அரசாங்கம் தனது எதிரிகளை வேட்டையாடும் முயற்சிக்கு நாம் இடமளியோம். நாட்டு மக்களே அரசாங்கங்கள் வருவதையும் போவதையும் தீர்மானிப்பவர்கள். இன்று வேலையில்லாப் போக்கு அதிகரித்துள்ளது. பணவீக்கமும் அதிகரித்துள்ளது.

மக்கள் படும் துயரங்களுக்கு மத்தியில் நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், அரசாங்கம் குறித்து திருப்திப்பட முடியாது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *