பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் நினைவு தினத்தை முன்னிட்டு புத்தளம் நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு
இலங்கை நாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் 7ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவுப் பேருரைகள் அடங்கிய நூல் வெளியீடு திங்கட்கிழமை (25) புத்தளம் பாலாவி நாகவில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபதில் பாடசாலையின் அதிபர் எஸ்.எம் ஹூஸைமத் தலைமையில் இடம்பெற்றது.
சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வு,சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நிகழ்வில்
இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் நூல் அறிமுக உரையையும், நினைவுப் பேருரையையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தினார்.
கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என்பதனையும் எடுத்துரைத்ததுடன்
வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனதுரையில் தொடர்ந்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ்வினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் பெற்றுக்கொண்டார்
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன் குறித்த நிகழ்வுக்கான பூரண ஊடக அனுசரனையை ஈபெஸ்ட் நிறுவனம் வழங்கியிருந்த மையும் குறிப்பிடத்தக்கது.







(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)