உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக இலங்கை பாதுகாப்புப் படை மாற வேண்டும்

இலங்கை பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) காலை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.பாதுகாப்பு அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒவ்வொரு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கெடெட் அதிகாரிகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டுப் பயிற்சி குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த பயிற்சி ஏனைய அரச துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியை விட தனித்துவமானது என்பதால் அது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
போரின்போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அரசாங்கம் ஏற்கனவே பெருமளவு நிதியை செலவிட்டு வரும் நிலையில் , அதனால் வழங்கப்படும் சேவைகள் பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனுள்ளதாகவும் திறம்படவும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நிர்மாணப்பணிகள், பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்.எஸ். சம்பத் துய்யகொந்தா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபொன்சு மற்றும் கபில ஜனக பண்டார, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.