கல்முனை சாஹிரா மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதான மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25 லட்சம் ரூபாய் நிதியின் மூலம் மேற்கொள்ளவிருக்கும் பாடசாலையின் மைதானத்தை சுற்றியுள்ள வடிகான்களை மீள் நிர்மாணம் செய்தல் மற்றும் மைதானத்திற்கு மண் இட்டு நிரப்பும் வேலைத்திட்டமானது இன்று (25) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், உடற்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரிஸ், பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளருமான எம்.ஐ.எம். றியாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எம். இம்தியாஸ், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)