கம்மல்துறையில்பொது நூலகம் அமைக்கக் கோரிக்கை!

நீர்கொழும்பு மாநகர சபை நிர்வாகத்துக்குட்பட்ட கம்மல்துறை கிராமத்துக்கு ஒரு பொது நூல் நிலையம் ஒன்றை அமைத்து தருமாறு பலகத்துறை கலை இலக்கிய வட்டம், நீர்கொழும்பு மாநகர முதல்வர் ரொபட் ஹீன் கெந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கம்மல்துறை ‘அல்பலாஹ்’ கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமும் பலகத்துறை கலை இலக்கிய வட்டமும் இணைந்து அண்மையில் ஏற்பாடு செய்த மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் இக்கோரிக்கை அடங்கிய கடிதம் நீர் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பஸீர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அக்கடிதத்தின் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கம்மல்துறை கிராமத்தில் 4500 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட. மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள ஒரே ஒரு பாடசாலையான கம்மல்துறை ‘அல்பலாஹ்’ கல்லூரியில் 1700 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இப்பிரதேச மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் அவர்களது கல்வி முன்னேற்றத்திற்கு வழி காட்டவும் இங்கு ஒரு நூல் நிலையம் இல்லாதிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எனவே இப்பிரதேச மக்களின் கல்வி முன்னேற்றம் கருதி நீர் கொழும்பு மாநகர சபை மேற்பார்வையில் இயங்கும் ஒரு பொது நூல் நிலையத்தை அமைத்துத் தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
நூல் நிலையம் அமைப்பதற்கு தேவையான காணியொன்றை வழங்கவும் நாம் தயாராக இருக்கிறோம் என்றும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(எம்.ஜே.எம். தாஜுதீன்)