உள்நாடு

மாவனல்லை இஜ்திமாவும் ஞானசாரதேரரின் சீற்றமும்..!

மாவனல்லையில் ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே மாவனல்லை கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இஜ்திமா (ஒன்று கூடல்) நிகழ்ச்சி மூலம் முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாதத்தை நோக்கி மீண்டும் மூலைச் சலவை செய்யப்படுவதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்துகின்றார். 2015.08.08 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மவனல்லையில் ஹிங்குள் ஓயா மஸ்ஜிதுல் ஹூதா ஜூம் பள்ளிவாசலில் நடைபெற்ற குறித்த நிகழ்வு தொடர்பாக ஞானசார தேரர் 2025.08.08 ஆம் திகதி செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி இவ்வாறு குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமூகத்தின் விடயங்கள் தொடர்பாக இனிமேல் எதுவும் பேசுவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த போதும் நாடடில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது இதயம் பட படக்கின்றது. பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு முன்னர் பலமுறை சொன்ன விடயங்கள் எதுவும் ஆட்சியாளர்களின் தலைக்கு ஏறவில்லை. எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. தனக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளன. அவை அனைத்தும் சிலரால் திட்டமிடப்பட்டு தினிக்கப்பட்ட வழக்குகள் என்பது இப்போதுதான் புரிகின்றது. நீதவான்கள் என்ன செய்ய. அவர்களுக்கு கீழால் இருப்பவர்கள் செய்யும் வலைக்கு அவர்கள் எதுவும் செய்ய முடியாது என்று தனது நிலையைப் பற்றி கவலை வெளியிட்ட ஞானசார தேரர் புதிய கண்டுபிடிப்பாக அண்மையில் மாவனல்லையில் நடைபெற்ற இஸ்லாமிய இஸ்திமா பற்றி பீதியை ஏற்படுத்தும் சில தகவல்களை தெரிவித்து அவரது பழைய தோற்றத்தை வெளிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கா ஜமாஅர்தே இஸ்லாமியின் மாவனல்லை கிளை மாவனல்லை பிரதேச முஸ்லிம்களுக்காக பிராந்திய இஸ்திமா ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்தது. இந்த இஸ்திமா மாவனல்லை ஹிங்குள் ஓயா ஜூம்ஆ பள்ளிவாசலில் 2025.08.08 ஆம் திகதி மாலை 4.00 மணியில் இருந்து இரவு 9.00 மணி வரையில் நடைபெற்றது. இந்த இஜ்திமா நிகழ்வில் மாவனல்லை பிரதேசத்தை சேர்ந்த இளம் பராயத்தினர் உட்பட வயது வேறுபாடு இன்றி ஆண்கள்
பலரும் (சுமார் 500 பேர்கள் அளவில்) கலந்து கொண்டனர். இங்கு மருத்துவ துறை கலாநிதி
மௌலவி ஆஸிம் அலவி, மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் உட்பட பல பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது தற்காலத்தில் பல்வேறு தாக்கங்களாலும் வழிதவறிச் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய, மத, கலாசார, பண்பாட்டு வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக உபதேசங்களை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்து வதாகும். அத்துடன் வழிகேடுகள், அநாச்சாரங்கள், சமூக சீர்கேடுகளில் இருந்து சமூகத்தை பாதுகாப்பது இதன் பிரதான நோக்கமாக இருந்தது. அத்துடன் மாவனல்லை பிரதேசத்தில் அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சில விரும்பத்த தகாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சம்பவங்கள் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகமான இளைஞர்கள் போதைப் பொருள், மதுபான பாவனைக்கு அடிமையாகி பலவிதமான சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால் அவர்களை சரியான திசைக்கு வழிநடத்த வேண்டிய தேவை அதிகமான உணரப்பட்டிருக்கின்றது. செல்போன் பாவனை அதிகரித்திருப்பதால் பயனுள்ள வழிகளில் செலவிட வேண்டிய மிகவும் பெருமதி வாய்ந்த நேரம் பொழுது போக்கு செயற்பாடுகளால் வீனடிக்கப்பட்டு வருவதும் இளைஞர் சமூகத்தை பாதித்துள்ள விடயங்களாகும்.
கடந்த ஜூன் மற்றும் ஓகஸ்ட் மாத காலப்பகுதிக்குள் போதைப் பொருளுக்கு அடிமையான 06 பேர்களைக் கொண்ட இளைஞர்கள் கும்பல் ஒன்று போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையில் சம்பந்தப்பட்ட மற்றொரு இளைஞரை கடத்திக் கொண்டு போய் கடுமையாக அடித்து துன்புறுத்தி குற்றுயிரான நிலையில் குறித்த இளைஞனின் வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர். ஆனாலும் அந்த இளைஞர் குடும்பத்தாரால் உடனடியாக கண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சில தினங்களில் உயிரிழந்தார். அவர் ஆஸ்பத்திரியில் பொலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் 06 இளைஞர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாகவும் சித்திரவதை செய்து துன்புறுத்தியதை கண்டு பிடிக்க முடியாமல் இருக்க சிறுநீரகம் கரைந்து பழுதடைந்து போவதற்காக 02 விச ஊசிகளை ஏற்றியதாகவும் சொல்லி இருந்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த மாவனல்லை பொலீசார் இந்த கொலையோடு சம்பந்தப்பட்ட 06 இளைஞர்களையும் மாவனல்லை பொலீசாரி னால் கைது செய்யது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர். மற்றுமொரு சம்பவத்தில் 2025.08.05 ஆம் திகதி மாவனல்லையில் வீடொன்றுக்குள் இருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில் 08 மாத சிசு ஒன்றின் சடலம் பொலீசாரினால் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியிலும் போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு இளைஞன் ஒரே வீட்டில் மூத்த சகோதரியை திருமணம் முடித்திருந்த நிலையில் க.பொ.த (உ.தர) படித்துக் கொண்டிருந்த இளைய சகோதரியுடனும் உறவு வைத்து அந்த மாணவிக்கு குழந்தை பிறக்க 08 மாதங்கள் இருந்த நிலையில் சிசுவை வெளியே எடுத்து புதைத்துள்ளமை பொலீசாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருக்கின்றது.
அதுமட்டுமல்லாது அண்மையில் பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்கள் சுட்டியக்காட்டிய ஒரு விடயமும் தற்போது இளைஞர்களையும் யுவதிகளையும் வழிதவறிப்போகச் செய்து கொண்டிருப்பதோடு கலாசார சீரழிவுக்கும் இந்நாட்டில் இதுவரையாலம் கட்டிக் காத்து வந்த குடும்ப கட்டமைப்பையும் சீர்குழைத்து வருவதாக மிகவும் கவலையோடு பேராயர் குறிப்பிட்டார். இந்த நாட்டிற்குள் தன்னின சேர்க்கைக்கு அரச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக பால்நிலை மாற்றம் செய்ததாக மருத்துவ சான்றிதழ் வழங்கி அதனை அத்தாட்சிப்படுத்தும் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வழங்கப்படு நடைமுறை திரை மறைவில் நடப்பதாகவும் இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த விடயம் எமது நாட்டிற்கு பொருந்தாத ஒரு கலாசார சீரழிவு மட்டுமல்லாது பலமான முறையில் பேணிப் பாதுகாத்து வந்த சிங்கள, பௌத்த, இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மத கலாசார பாரம்பரியங்களுக்கு முற்றிலும் தலைகீழான ஒரு அனுமதிக்க முடியாத செயற்பாடு என்றார். இவ்வாறு இளம் பராயத்தினர் வழிதவறிப் போகும் அதிகமான சம்பவங்கள் நடைபெற்று வருவதால் சமூகத்தை பாதுகாத்து நழ்வழிப்படுத்தும் பொறுப்பு சமூகத்தை சார்ந்ததாகும். இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக அனைவரும் விரல் நீட்டுவது இவ்வாறான சமூக நல அமைப்புக்கள், கல்விமான்கள் தொடர்பா கவாகும். அந்த வகையில் இளம் சந்ததியினரை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் இளம் தளை முறையினருக்கு இஸ்லாமிய வாழ்வியல் ஒழுக்கநெறிகள் தொடர்பாக உபதேசங்களை வழங்கும் இஜ்திமா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை.
ஞானசார தேரர் இந்த இஜ்திமா குறித்தே 2025.08.08 ஆம் திகதி செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி இது மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு இளைஞர்களை தயார் படுத்துவதற்காக மூலைச் சலவை செய்வதற்காக ஏற்பாடு செய்த இஜ்திமா என்றும் இந்த இஜ்திமாவை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டு பயங்கரவாத இயக்கம் என்று தடைசெய்யப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 54 வருடங்கள் பழமைவாய்ந்த ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு எற்பாடு செய்தது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபராக சிறையில் அடைக்கப்பட்டிருந்து குற்றச்சாட்டுக்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்ட மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் எவ்வாறு இந்த இளைஞர்களுக்கு உரையாற்ற முடியும்? அதற்காக அனுமதி வழங்கியது யார்? இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் உடனடியாக விசாணைகளை ஆரம்பிக்க வேண்டும். ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று இந்த இளைஞர்களை பயன்படுத்தி இஸ்ரவேலர்களின் சபாத் ஹவுஸ் மீது தாக்குதல்களை நடத்ததிவிட்டு மொசாட் தாக்கியதாக சொல்லவும் முடியும். அதனால் ஏதாவது நடக்க முன்னர் நான் எச்சரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
அவரது இந்த குற்றச்சாட்டுக்கள அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதரமற்றவைகளாகும் பேச்சு, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் இருக்கின்றது என்ற ஒரே காரணத்தால் யாரும் எதையும் சொல்லலாம், கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனாலும் வெளிப்படுத்தக்கூடிய கருத்துக் களால் ஏற்படும் பின் விளைவுகள், பாதிப்புக்களுக்கு அத்தகைய கருத்தை வெளிப் படுத்தியவரே பொறப்பு கூற வேண்டும் என்று அரசியல் அமைப்பின் பிரிவு 15 இல் உள்ள உப பிரிவுகள் தெரிவிக்கின்றன. இதே ஞானசார தேரர் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் எந்த அரசியல் மகாமுக்குள் இருந்தார் என்பதை முழு நாடுமே அறிந்து வைத்திருக்கின்றது. அலுத்கமை வன்முறை, திகனை கலவரம், மினுவங்கொடை கலவரம், நிகவெரடிய வன்முறைகள் என்று அடுக்கிக் கொண்டே போனால் இக்காலப்பகுதிக்குள் நடைபெற்ற அனைத்து விதமான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் காரணம் என்றால் அதற்கு வழிவகுத்த காரணிகளில் இதே ஞானசார தேரரது அமைப்பு காரணம் என்பதை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. ஆனாலும் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. தொடர்ச்சியாக நாட்டில் இன நல்லிணக்கம்,
ஐக்கியத்தை குறிக்கோளாகக் கொண்டு ஒரு தொண்டு நிறுவனமாக இருந்து செயற்பட்டு வருவதோடு இஸ்லாமிய சன்மார்க்க கடமைகளையும் செய்து வருகின்ற அமைப்பாகும்.
அந்த வகையில் பார்க்கும் போது ஞானசார தேரர் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்வாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஜனாதிபதி மன்னிப்பை பெற்று வெளியே இருக்கின்றார். அதன் பின்னர் மற்றுமொரு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப் பட்டாலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் பிணையில் இருக்கின்றார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு சம்பந்தப் பட்டதாக கைது செய்யப்பட்ட பலர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே இருந்துகொண்டு சமூக செயற்பாடுகளில் ஈடபட்டால் என்ன? ஞானசார தேரர் பிணையில் இருந்துகொண்டு செய்தியாளர் மாநாடு நடத்த முடியும் என்றால் குற்றச்சாட்டு நிரூபிக்க ஆதரம் இல்லை என்ற அடிப்படையில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் குற்றவாளிகளாக பதுங்கி வாழ வேண்டிய அவசியம் இல்லை.
அதனால் தற்போது நாட்டில் அரசியல் மேற்பரப்பில் என்ன நடக்கின்றது என்பதை அனைவரும் சரியான முறையில் அவதானித்து விளங்கிக்கொள்ள வேண்டும். இனிமேலாவது ஒருவன் பேச முடியும் என்பதற்காக சொல்கின்றான் என்று சொல்வதை அப்படியே நம்பி வழிகெடக் கூடாது. அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். ஞானசார தேரர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போக்கை விமர்சிக்க ஏதாவதொரு முஸ்லிம் விவகாரத்தையும் சேர்த்து தான் கருத்து வெளியிடுகின்ற போக்கை கடைபிடித்து வருகின்றார். தான் அரசாங்கத்தின் நேரடியான எதிரி என்று காட்டிக்கொள்ள விரும்பாததால் இவ்வாறு சுற்றி வளைத்து அரசை சாடுகின்றார். இது புதிய அரசியல் காய்நகர்த்தல் தந்திரோபாயமாகும்.
அதே நேரம் இந்த இஜ்திமாவை ஏற்பாடு செய்த ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு மாவனல்லை பொலீஸ் நிலையத்தில் அனுமதி பெற்றிருந்ததோடு பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு, புலனாய்வு பிரிவு ஆகியவற்றிற்கும் அறிவித்து அனுமதியை பெற்றிருந்ததோடு அதன் 04 அதிகாரிகளும் சமூகமளித்து நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதனால் இங்கு ஞானசார தேரர் குற்றம்சாட்டும் அளவிற்கு எந்தவிதமான பயங்கரவாத செயற்பாட்டுக்கும் இளைஙர்களை ஊக்கமளிக்கும் கதைகள், உரைகள் பேசப்படவில்லை. ஞானசார தேரர் முற்றாக உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து நாட்டில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு இனவாத முறண்பாட்டை தோற்றுவிக்க மீண்டும் முயற்சி செய்கின்றார் என்பது அவரது செய்தியாளர் மாநாட்டில் இருந்து தெளிவாகின்றது.

(எம்.எஸ்.அமீர் ஹூசைன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *