இலங்கை சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் இதுவரை விடுவிக்கப்படாத காரணம் என்ன?
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.நவாஸ், உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ்.அலா அஹமட், என்.நிலூபர், கணக்காளர் எஸ்.எல்.நிப்ராஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நேற்று (18.08.2025) நடைபெற்றது.
இதன்போது சவூதி அரேபியா நாட்டிலிருந்து இலங்கைக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட தமிழ் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் இலங்கை சுங்கப் பிரிவினரால் கடந்த 1½ வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயமாக இதுவரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அறபுக்கல்லூரிகள் பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்வதனால் நமது நாட்டில் இயங்கி வரும் அறபுக் கல்லூரிகளை பதிவு செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலம்குளம் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகிகளுக்கும், சாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகிகளுக்குமிடையிலான பிணக்குகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அம்பாறை மாவட்ட தலைவர் ஐ.எல்.எம்.ஹாசிம் (மௌலவி), அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.எல்.நாசர் கணி (விரிவுரையாளர்) ஆகியோர்களை கொண்ட விஷேட குழு நாவிதன்வெளி ஆலங்குளம் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகிகளுக்கும், சாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகிகளுக்கும் இடையிலான பிணக்கிற்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு 05 மாதங்கள் சென்ற பின்னும் இதுவரை இரண்டு பள்ளிவாசல் நிருவாகிகளுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விஷேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்து இரு பள்ளிவாசல் நிருவாகிகளையும், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து இவ் இரண்டு பள்ளிவாசல் நிருவாகிகளுக்குமிடையிலான பிணக்கிற்கு தீர்வு காண வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான விஷேட கூட்டம் ஒன்றை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது
(கே எ ஹமீட்)