வலம்புரி கவிதா வட்ட ஏற்பாட்டில் வெகு சிறப்பாக இடம்பெற்ற சத்திய எழுத்தாளர்நாகூர்கனியின் நினைவேந்தல் நிகழ்வு..!
பிரபல எழுத்தாளரும் வலம்புரி கவிதா வட்டத்தின் ஸ்தாபக உறுப்பினருமான ‘சத்திய எழுத்தாளர்’ எஸ்.ஐ. நாகூர்கனி அவர்களுக்கான ‘நினைவேந்தல் நிகழ்வு’, (16) சனிக்கிழமை மாலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் வெகு சிறப்பாக
நடைபெற்றது.
வலம்புரி கவிதா வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் தலைமையில் இடம்பெற்றது. வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் ஈழகணேஷ் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்ததோடு, வரவேற்புரையையும் நன்றியுரையையும் வழங்கினர்.
மர்ஹூம் நாகூர்கனி அவர்களது குடும்ப உறுப்பினர்களும், இன்னும் பல அபிமானிகளும் இதில் கலந்து அன்னாருக்கு கௌரவம் செலுத்தினர். இலங்கைக்கான முன்னாள் உயர் ஸ்தானிகரும், வெளிநாட்டமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளரும், நாகூர்கனி அவர்களின் மைத்துனருமான இப்ராஹிம் அன்சார், மூத்த எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான ‘தமிழ்மணி’ மானா மக்கீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர், கவிதாயினி பாத்திமா நளீரா, பட்டிமன்ற பேச்சாளர் ஆர். வைத்தமாநிதி, ‘மனிதநேயன்’ இர்ஷாத் ஏ. காதர், சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், சமூகசேவையாளர்கள் முஹம்மத் முஸம்மில், முஹம்மத் அலி, முஹம்மத் பர்ஸான், தஸ்கர முஹம்மத் ராஸிக், எழுத்தாளர்களான நாச்சியாதீவு பர்வீன், ரிம்ஸா முஹம்மத், ரஷீத் எம். ஹாயிஸ், நூருஸ் ஷிபா சாஹிர், எம். நவாஸ்டீன் போன்றோருடன், வகவ கவிஞர்களான எம்.எஸ். அப்துல் லதீப், கம்பளை ரா. சேகர், கம்மல்துறை இக்பால், மஸீதா அன்சார், கமர்ஜான் பீபி, தி. ஸ்ரீதரன், கலீல்தீன், லைலா அக்ஷியா, பர்ஹாத் சித்தீக் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள்
கலந்து கொண்டனர்.
‘தினகரன், தினகரன் வாரமஞ்சரி’ பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்’ தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன், ‘விடிவெள்ளி’ பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைறூஸ், ‘கவிமாமணி’ அல் அஸூமத், ‘இலக்கிய வித்தகர்’ மேமன்கவி, ‘தினகரன்’ துணை ஆசிரியர் கே. ஈஸ்வரலிங்கம், ‘ஜனரஞ்சக எழுத்தாளர்’ மொழிவாணன், ‘பாரம்பரியம் புகழ்’ எம்.எஸ்.எம். ஜின்னா, ‘பன்னூலாசிரியர்’ கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன், ராஜா நித்திலன், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ‘சந்தக்கவிமணி’ கிண்ணியா அமீர் அலி, ‘சிந்தனைப்ரியன்’ முஸம்மில், வகவ தேசிய அமைப்பாளர் எஸ். தனபாலன் ஆகியோர் சத்திய எழுத்தாளர் அவர்களுடன் தங்களுக்கிருந்த உறவுகள் குறித்தும் அவரது இலக்கிய, சமூகப் பங்களிப்புக்கள் குறித்தும் உரையாற்றினர்.
கைரியா பாடசாலை முன்னாள் உப அதிபர் பரீதா அஸார், வாழைத்தோட்டம் எம். வஸீர், ‘பிறைக்கவி’ முஸம்மில் ஆகியோர் இரங்கல் கவிதைகளைப் பாடினர்.
லண்டனிலிருந்து நாகூர்கனி அவர்களின் மூத்த மகள் ரிஸ்மியா ஹாபி, தனது தந்தை பற்றி ‘வட்ஸ்அப்’ பில் வாசித்தனுப்பிய கவிதை ஒலிபரப்பப்பட்டது. தமிழகத்திலிருந்து நாகூர்கனி அவர்களின் 55 வருட கால பேனா நண்பர் ‘தமிழ்ப்புலவர்’ அ. நீலாவதி எம்.ஏ., பீ.எட்., எம்.பில். (பணி நிறைவு தலைமை ஆசிரியர்) அனுப்பி வைத்திருந்த இரங்கற்பாவை தஹானி நௌபலும், கட்டாரிலிருந்து கவிஞர் மெய்யன் நட்ராஜ் அனுப்பி வைத்திருந்த கவிதையை இலங்கை வானொலி அறிவிப்பாளர் ஸ்ரீதேவி கணேசனும், கவிஞர் கல்ஹின்னை பவுமி ஹலீம்தீன் அனுப்பி வைத்திருந்த கவிதையை இளநெஞ்சன் முர்ஷிதீனும் வாசித்தனர்.
நாகூர்கனி அவர்களின் குடும்ப சார்பில், துபாயிலிருந்து இலங்கை வந்திருக்கும் அன்னாரின் இளைய மகள் டாக்டர் ருஸைக்கா நாகூர்கனி நன்றி தெரிவித்து உரையாற்றினார். தனது தந்தையாரின் கடைசி நிமிடங்கள் பற்றியும் தெரிவித்தார்.
“ஒரு மாத காலம் தன்னோடு வசிக்க, தனது தாயாரோடு டுபாய் வந்திருந்த தந்தை நாகூர்கனி அவர்கள் தனது அத்தனை பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் காணக்கிடைத்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார்.
கடந்த மாதம் 25 ஆம் திகதி மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறையடி சேர்ந்தார். அவர் எங்கள் கண்முன் எவ்வித வேதனையையும் அனுபவிக்கவில்லை. அனைவரது பிரார்த்தனைகள் காரணமாக, நிம்மதியாக தனது இறுதி மூச்சை எங்கள் கண்முன் விட்டார்” என, கண்ணீர் மல்கக் கூறி முழு சபையையும் கண்கலங்க வைத்தார்.
‘சத்திய எழுத்தாளர்’ நாகூர்கனி அவர்களின் நினைவுகளைச் சுமந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு, நெகிழ்ச்சியுடன் நிறைவுபெற்றது.
( ஐ. ஏ. காதிர் கான் )
(படங்கள் – முஹம்மத் நசார்











